தெலங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழை: வீடுகள் இடிந்து 11 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தெலங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழை: வீடுகள் இடிந்து 11 பேர் பலி

திருமலை: வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஆந்திர வடக்குப்பகுதி மற்றும் தெலங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் பலத்த சூறாவளி வீசியது. இதனால் நேற்று காலை விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த வங்கதேசத்தை சேர்ந்த சரக்கு கப்பல், நங்கூரத்தை அறுத்துக்கொண்டு கரை ஒதுங்கியது.

இதில் இருந்த 15 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை முதல் தெலங்கானா மாநிலத்தில் கனமழை பெய்யத்தொடங்கியது.

விடியவிடிய இன்று 2வது நாளாக மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் ஐதராபாத் உள்ளிட்ட 17 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

பெரும்பாலான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன்காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஐதராபாத் ஓல்டுசிட்டி பகுதியில் உள்ள முகமதியான் ஹில்ஸ் பகுதியில் உள்ள 10 வீடுகள் கொண்ட காம்பவுண்ட் சுவர் மீது ராட்சத பாறை சரிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 மாத கைக்குழந்தை உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்தனர்.

இதுதவிர மாநிலத்தில் ஆங்காங்கே வீடுகள் இடிந்ததில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து 2வது நாளாக கனமழை தொடர்வதால் மீட்பு பணியை மேற்கொள்ள முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.   இதற்கிடையில் மீட்பு பணியில் தீவிரம் காட்ட அரசு அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனிடையே ஐதராபாத் வரலாற்றில் முதன்முறையாக 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் 20 சென்டி மீட்டர் மழைபதிவாகியிருந்தது.

இதுவே அதிகபட்ச மழைப்பதிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை