காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட நடிகை குஷ்பு பாஜவில் இணைந்தார்: டெல்லி அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட நடிகை குஷ்பு பாஜவில் இணைந்தார்: டெல்லி அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு

சென்னை: காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட நடிகை குஷ்பு இன்று பிற்பகலில் டெல்லி பாஜ அலுவலகத்துக்கு சென்று தேசிய செயலாளர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்பு இணைந்த போது, தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவராக கே. எஸ். அழகிரி பொறுப்பேற்ற பின்பு தன்னை எந்த நிகழ்ச்சிகளுக்கும் முறையாக அழைப்பதில்லை என்று குற்றம்சாட்டி கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார்.

மேலும், மத்திய பாஜ அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கையை காங்கிரஸ் முழுமையாக எதிர்த்து வந்த நிலையில், கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்பு அதற்கு ஆதரவு தெரிவித்து டிவிட்டரில் கருத்துகளை பதிவு செய்து வந்தார்.

இதற்கு காங்கிரசார் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். அதுமட்டுமல்லாமல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருந்து அவருக்கு நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.

இப்படி பாஜவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்ததால் அவர் பாஜவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த குஷ்பு, சமீபத்தில் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார்.

அத்துடன், ‘பாஜவில் இணைவதாக வெளிவரும் தகவல் அனைத்தும் தவறானது என்று கூறினார். இதனால் பாஜவில் இணையப் போகும் தகவல் வதந்தி என அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆனாலும், குஷ்புவின் கணவர் சுந்தர். சி தமிழக பாஜ தலைவரை தனியாக சந்தித்து பேசிய விவகாரம் பரபரப்ைப ஏற்படுத்தியது. இதற்கிடையே, டெல்லி சென்ற குஷ்பு, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் கே. சி. வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.



அப்போது தனக்கு கட்சியில் உயர் பொறுப்பிலான பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் சென்னை திரும்பிய அவரை பற்றி இணையதளங்களில் பாஜவில் அவர் சேருவது உறுதி என தொடர்ந்து தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

இந்நிலையில், மீண்டும் நேற்று இரவு 9. 30 மணிக்கு தனது கணவருடன் டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, கருத்து சொல்ல விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

காங்கிரஸ் கட்சியில் தான் இப்போது இருக்கிறீர்களா என்ற கேள்விக்கும்,

அதே பதிலை கூறிவிட்டு சென்றதால் பாஜவில் அவர் இணையப்போவதாக மீண்டும் தகவல் வெளியானது. அவர் காங்கிரசில் இருப்பாரா அல்லது பாஜவில் சேருவாரா என்ற குழப்பம் காங்கிரசார் மத்தியில் நிலவியது.

இந்நிலையில், இன்று காலை அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனது டிவிட்டர் பதிவில், ‘‘பலர் என்னிடம் ஒரு மாற்றத்தை பார்க்கின்றனர்.

வயதிற்கு ஏற்ப நமது வளர்ச்சியும் மாற்றமும் இருக்கும். கற்றவை மற்றும் கற்காதவை, உணர்வுகளின் மாற்றம், பிடித்தவை மற்றும் பிடிக்காதவை, எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் ஆகியவை ஒரு புதிய வடிவத்தைக் கொடுக்கும்.

கனவுகள் புதியவை.

லைக்குக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் இருப்பதை போல, சரிக்கும் தவறுக்கும் வித்தியாசம் இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

மாற்றம் தவிர்க்க முடியாதது’’ என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் போது ஒரு புகைப்படத்தையும் குஷ்பு வெளியிட்டிருக்கிறார்.

அதில் காவி நிறம் போன்ற உடையை குஷ்பு அணிந்திருக்கிறார். அவரது இந்த பதிவு பாஜவில் குஷ்பு இணைவதை உறுதிபடுத்தியுள்ளது.

நடிகை குஷ்புவால் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு உடனடியாக நீக்கப்படுகிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

குஷ்பு அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, பதவியிலிருந்து நீக்கப்பட்ட குஷ்பு எழுதிய கடிதம் வெளியானது. அதில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மற்றும் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன்.

இதுவரை ஒத்துழைப்பு தந்த தங்களுக்கும், ராகுல்காந்திக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறப்பட்டிருந்தது. இதனால் நடிகை குஷ்பு பாஜவில் இணைவது உறுதியாகியுள்ளது.

அவர் இன்று பிற்பகல் 12. 30 மணி அளவில் அகில இந்திய பாஜ தலைவர் ஜெ. பி. நட்டாவை நேரில் சந்தித்து பாஜவில் இணைகிறார்.

அதற்காக குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர். சிக்கு ஜெ. பி. நட்டாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை