திரிபுரா பாஜ ஆட்சிக்கு ஆபத்து?... 7 அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திரிபுரா பாஜ ஆட்சிக்கு ஆபத்து?... 7 அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாம்

அகர்தலா: திரிபுராவில் ஆளும் பாஜக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் முதல்வருக்கு எதிராக 7 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் முதல்வர் பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பாஜக. ஆட்சி நடைபெற்று வருகிறது.

அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 எம்எல்ஏக்களில் 36 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். அவர்களில் 7 பேர் முதல்வர் பிப்லாப் குமாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மூத்த தலைவர் சுதீப் ராய் பர்மன் தலைமையிலான 7 எம்எல்ஏக்கள் குழு டெல்லி வந்துள்ளது. அவர்கள் பாஜக தலைமை அலுவலகத்தில் முகாமிட்டுள்ளனர்.

இதுகுறித்து சுதீப் ராய் பர்மன் கூறகையில், ‘முதல்வர் பிப்லாப் சர்வாதிகாரமாக செயல்படுகிறார்.

அனுபவம் இல்லாதவர், மக்கள் செல்வாக்கு கிடையாது.

எனவே அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக தேசிய தலைவர் ஜே. பி. நட்டாவை நேரில் சந்திக்க வந்துள்ளோம். ஜே. பி. நட்டாவை சந்திக்காமல் ஊர் திரும்ப மாட்டோம்.

எங்களுக்கு மேலும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதால், டெல்லி வரவில்லை’ என்றார்.

ஆனால், திரிபுரா மாநில பாஜக தலைவர் மாணிக் ஷா கூறுகையில், ‘பிப்லாப் தலைமையில் பாஜக அரசு பாதுகாப்பாக உள்ளது. ஏழு, எட்டு எம்எல்ஏக்கள் சேர்ந்து இந்த ஆட்சியை கவிழ்த்து விட முடியாது’ என்றார்.

திரிபுரா பாஜகவில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளதால், பிப்லாப் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமா? ஏன்ற கேள்வியும் எழுந்துள்ளது.



.

மூலக்கதை