தொற்று பாதித்த 200 பேரை ஆம்புலன்சில் சுமந்து சென்ற ‘மனித நேய’ டிரைவர் கொரோனாவால் பலி: டெல்லி மக்களுக்கு பெரும் இழப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தொற்று பாதித்த 200 பேரை ஆம்புலன்சில் சுமந்து சென்ற ‘மனித நேய’ டிரைவர் கொரோனாவால் பலி: டெல்லி மக்களுக்கு பெரும் இழப்பு

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று பாதித்த 200 பேரை ஆம்புலன்சில் அழைத்து சென்றும், சிலருக்கு இறுதி சடங்கும் செய்த ‘மனித நேய’ டிரைவர் கொரோனாவால் பலியானார். டெல்லி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய இவரது மறைவு, அவர்களுக்கும் இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கும் ஷரித் பகத் சிங் சேவா அமைப்பில் டிரைவராக ஆரிஃப் கான் (45) என்பவர் பணியாற்றினார். இவர், டெல்லியின் சீலாம்பூரில் வசித்து வந்தார்.

கடந்த 6 மாதங்களாக கொரோனா தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதிலும், அவர்களுக்கு உதவி செய்வதிலுமே ஆர்வம்காட்டி பணியாற்றி வந்தார். கடந்த ஆறு மாதங்களில்,  அவர் சுமார் 200 கொரோனா வைரஸ் நோயாளிகளை தனது ஆம்புலன்ஸ் மூலம்  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.



அவர்களில் சிலர் இறந்த பிறகு, அவர்களது சடலத்தை  இறுதி சடங்கு செய்யம் இடத்திற்கே ஆம்புலன்சில் கொண்டு சென்று, பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கு உதவி வந்தார். 24  மணிநேரமும் கொரோனா நோயாளிகளுக்காவே பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு கடந்த 3ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது.

டெல்லியில் உள்ள இந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் இறந்தார். இவரது மறைவு, ெடல்லி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



இதுகுறித்து ஷரித் பகத் சிங் சேவா அமைப்பினர் கூறுகையில், ‘கொரோனா தொற்றால் இறந்த ஆரிஃப் கானின் வருவாயை மட்டுமே நம்பி அவரது குடும்பம் உள்ளது. இவரது சம்பளம் மாதம் 16,000  ரூபாய்.

அவரது வீட்டின் மாத வாடகை 9,000 ரூபாய். இது ஒரு சவாலான  நேரம்.

ஆரிஃப் கான் மக்களுக்கும் உதவினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறுதி  சடங்குகளை செய்தார்.

அவர் முஸ்லீமாக இருந்தாலும், கொரோனாவால் இறந்த இந்துக்களின் இறுதி  சடங்குகளையும் செய்தார். அவர் தனது பணி மற்றும் கடமையில் பொறுப்புடன் நடந்து கொண்டார்.

கொரோனா நோயாளிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அவ்வப்போது பண உதவியும் செய்துவந்தார்.

இறந்த நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் இறுதி சடங்குகளில் பங்கேற்கவில்லை என்றால், ஆரிஃப் கானே இறுதி சடங்குகளை செய்தார்.

ஆரிஃப்பின் 22 வயது மகன் ஆதில், மார்ச் மாதத்திற்கு பின்னர் தனது தந்தையை ஒரு சில முறை மட்டுமே பார்த்ததாக கூறினார். வீட்டிற்கு சென்று துணிமணிகள் அல்லது வேறு சில பொருட்கள் எடுக்க சென்ற போதுதான், அவரை பார்த்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு உதவிய ஆரிஃப் கானின் குடும்பத்தினர், அவரது சேவையை ஒருபக்கம் பாராட்டினாலும், எப்போதும் அவரைப் பற்றி கவலையில் இருந்தனர். தனக்கு கொரோனா பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சமின்றி பணியாற்றினார்.

ஆனால், தற்போது கொரோனாவால் ‘மனித நேய’ டிரைவர் ஆரிஃப் கான் மறைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்றனர்.

.

மூலக்கதை