சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது: கோயம்பேடு மார்க்கெட்டில் 50 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் பீதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது: கோயம்பேடு மார்க்கெட்டில் 50 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் பீதி

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், வியாபாரிகள் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய்க்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கானவர்களை பலி கொண்டுள்ளது.

இருப்பினும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில்  இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தது. கொரோனா பரவ முக்கிய காரணமாக கோயம்பேடு மார்க்கெட் இருந்தது.

இந்த வளாகத்தில் 200 மொத்த விற்பனை கடைகளும் சில்லறை விற்பனைக்கு என ஆயிரம் கடைகளும் உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பேர்வரை வந்து செல்லும் இடமாக இந்த காய்கறி மார்க்கெட் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவ துவங்கியதில் இருந்து மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. ஆனால் கோயம்பேடு மார்க்கெட் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருந்தது.

ஆனால் கடந்த ஏப்ரல் இறுதியில் கோயம்பேட்டில் வியாபாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த வியாபாரிகளை தேடிப்பிடித்து தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர்.

இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு சென்னை அருகே திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் திறக்கப்பட்டது.

அங்கு போதிய இடவசதி மற்றும் வாகனங்கள் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் வியாபாரிகள் அவதிப்பட்டனர். மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடைகளை மாற்ற வேண்டும் என்று வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து கடந்தமாதம் 28ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மட்டும் திறக்கப்பட்டு இங்கு 200 கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. நள்ளிரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை விற்பனைக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

ஆனால் பழம், பூ மற்றும் மொத்த வியாபார கடைகள் செயல்பட அனுமதிக்கவில்லை. கொரோனா மீண்டும் பரவிவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை சென்னை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் எடுத்தது.

மேலும் வியாபாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்துவரும் வாகனங்களும் கடும் சோதனைக்கு பிறகு மார்க்கெட்டில் அனுமதிக்கப்பட்டது.

மார்க்கெட் வளாகம், வாகனம் என பல இடங்களில் கிருமி நாசினி தெளித்து துப்புரவு பணியாளர்கள் சுகாதார பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

இருப்பினும் பெரும்பாலான வியாபாரிகள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மார்க்கெட்டில் குவிந்ததால் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவியது. இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுமார்2,700 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா பரவியுள்ளதால் சென்னை மக்கள் கடும் அச்சம் அடைந்து உள்ளனர்.

இதனிடையே கோயம்பேடு மார்க் கெட்டில்  இடம் ஒதுக்கி தரும் படி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரியிடம் சிறிய மற்றும் மொத்த வியாபாரிகள் மனு கொடுத்துள்ளனர்.

.

மூலக்கதை