மாமல்லபுரம் இசிஆர் சாலையில் இன்று அதிகாலை பயங்கரம்: கார் மீது கன்டெய்னர் லாரி மோதி 3 பேர் பலி: 3 பேர் உயிர் ஊசல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாமல்லபுரம் இசிஆர் சாலையில் இன்று அதிகாலை பயங்கரம்: கார் மீது கன்டெய்னர் லாரி மோதி 3 பேர் பலி: 3 பேர் உயிர் ஊசல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையில் இன்று அதிகாலை கார் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும், ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக இன்று அதிகாலை புதுவை மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த காரில் ஒரு பெண் உள்பட 6 பேர் இருந்தனர்.

அதிகாலை 7 மணி அளவில் குன்னத்தூர் அருகே வரும்போது, எதிர்திசையில் வந்த கன்டெய்னர் லாரி வேகமாக  காரின் மீது மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இவ்விபத்தில் காரில் இருந்த செந்தில் (40), முருகன் (53), ஜெயராமன் (70) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.மேலும், சுபா (40), மூர்த்தி (60), சுந்தரவரதன் (52) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதைப் பார்த்ததும் கன்டெய்னர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த சுபா உள்பட 3 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், விபத்தில் இறந்த 3 பேரின் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

கன்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

.

மூலக்கதை