புதிய அறிவிப்பாணை இன்று வெளியானது... தொல்லியல் பட்டய படிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதிய அறிவிப்பாணை இன்று வெளியானது... தொல்லியல் பட்டய படிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி

புதுடெல்லி: தொல்லியல் துறை முதுகலை பட்டயப் படிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி வழங்கி மத்திய தொல்லியல் துறை இணை இயக்குனர் இன்று புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பாணையில் கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் இயங்குகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்பிற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.

இந்த படிப்பிற்கு இந்திய வரலாறு, தொல்லியல் துறை, மானுடவியல் மற்றும் தொல்லியல் மொழிகளான சமஸ்கிருதம், பாலி மற்றும் அரபு மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 15 இடங்களுக்கு நவ. 8க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்பிற்கான கல்வித்தகுதியில் செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது.

உலகின் பழமையான மொழிகளில் தமிழ் முக்கியமானது. தமிழர் தொல்லியல் வரலாறு மிக நீண்டது.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் தொல்லியல் அகழாய்வுகள் நடந்து வருகின்றன. அதிகளவிலான பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களும் இங்குதான் உள்ளன.

தொல்லியல் சார்ந்த படிப்புகளில் தமிழ் இருக்க வேண்டியது அவசியம். எனவே மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் படிப்புகளுக்கான இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், மதுரை மார்க்சிஸ்ட் தொகுதி எம். பி சு. வெங்கடேசன் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்து, தமிழையும் இணைத்து முறையாக புதிதாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் செம்மொழியான தமிழ் மொழியை அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில், மத்திய அரசின் தொல்லியல் படிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அழகுமணி ஐகோர்ட் மதுரை கிளையில் முறையீடு செய்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை (இன்று) அவசரமாக விசாரிப்பதாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து வக்கீல் ரமேஷ்குமார் சார்பில், இது தொடர்பான மனு நேற்று ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இப்பிரச்னையில் திடீர் திருப்பமாக செம்மொழியான தமிழ் உள்பட 10 மொழிகளுக்கு தொல்லியல் துறை பட்டயபடிப்பில் அனுமதி வழங்கி புதிய அறிவிப்பாணையை மத்திய தொல்லியல் துறை இணை இயக்குனர் இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய அறிவிப்பாணையில் மத்திய தொல்லியல் துறை பட்டயப்படிப்புக்கான தகுதிப் பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் செம்மொழிகளான சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடிஷா, பாலி, பிராகிருத், அராபிக், பாரசீகம் ஆகிய மொழிகளும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழக மக்களின் கடும் எதிர்ப்பின் பலனாக மத்திய தொல்லியல் துறை தனது முந்தைய உத்தரவை வாபஸ் பெற்று தற்போது புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

மேலும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் தற்போது இந்த அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை