இன்று மைக் பென்சுடன் நேரடி விவாதம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் தயாரானார் கமலா ஹாரிஸ்: பதற்றத்தில் குடியரசு கட்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று மைக் பென்சுடன் நேரடி விவாதம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் தயாரானார் கமலா ஹாரிஸ்: பதற்றத்தில் குடியரசு கட்சி

சால்ட் லேக் சிட்டி: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. அதிபர் பதவிக்கு போட்டியிடும் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ஜோ பிடெனும் கடந்த வாரம் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் திடீரென தனக்கு கொரோனா என்று டிரம்ப் செய்தி வெளியிட்டார்.   வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த விவகாரம்தான் இப்போது இரண்டு விதத்தில் சர்ச்சையாகி உள்ளது.

3 இரவுகள் மட்டுமே மருத்துவமனையில் தங்கிய டிரம்ப், முற்றிலும் குணமடைந்து விட்டேன் என்று, தடாலடியாக வெள்ளை மாளிகைக்கு திரும்பி விட்டார். வெள்ளை மாளிகைக்குள் நுழையும் முன்பே முகக் கவசத்தை கழற்றி வீசிய அவர், ‘மக்களே, கொரோனாவை வென்று விட்டேன்.

நீங்களும் கொரோனாவுக்கு பயப்படாதீர்கள்’ என்று அட்வைஸ்களை அள்ளி விட்டுள்ளார்.

அவரது இந்த கோமாளித்தனம், அனைவரையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. ‘3 நாட்களில் எப்படி அவர் முழுமையாக குணமடைந்தார்? அதிபர் தேர்லுக்கான பிரசாரம் உச்ச கட்டத்தில் உள்ள நிலையில், அவர் வேண்டுமென்றே ஸ்டண்ட் அடிக்கிறார்.

இதில் ஏதோ சூது இருக்கிறது. அவருக்கெல்லாம் குவாரன்டைன் கிடையாதா?’ என்று குமுறுகிறார்கள் அமெரிக்க மக்கள்.

மற்றொரு புறம் கொடிய நோயான கொரோனாவுக்கு உரிய மருந்தை அமெரிக்கா ஏற்கனவே கண்டுபிடித்து விட்டது என்றும், உலகிலேயே முதன் முறையாக அந்த மருந்து, டிரம்ப்புக்கு செலுத்தப்பட்டது என்ற செய்திகளும் றெக்கை கட்டி பறக்கின்றன. இதிலும் அமெரிக்கா சுயநலத்துடன் நடந்து கொள்கிறது என வளரும் நாடுகள் வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த துணை அதிபர் பதவிக்கான வேட்பாளர் மைக் பென்சும், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசும் இன்று நேரடி விவாதத்தில் பங்கேற்கின்றனர்.

சால்ட் லேக் சிட்டியில் உள்ள உட்டா பல்கலைக்கழகத்தில் இந்த விவாதம் 90 நிமிடங்கள் நடைபெறும் என்றும், அந்த 90 நிமிடங்களும் அப்படியே நேரடியாக, எந்த எடிட்டும் செய்யப்படாமல் உலகம் முழுவதும் ஒளிபரப்பாகும் என்றும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் முஷ்டியை முறுக்கிக் கொண்டு இந்த விவாதத்திற்காக தயாராக உள்ளனர். எனினும் கமலா ஹாரிஸ், ஏற்கனவே பிரசாரத்தில் முந்தி விட்டார் என்று அமெரிக்க ஊடகங்கள் எழுதி வருகின்றன.

இன்றைய வாய்ப்பையும் அவர் நழுவ விடமாட்டார் என்று எதிர்பார்க்கலாம்.
இன்றைய விவாதம் எப்படி இருக்கப் போகிறது என்று நேற்றே அவர் கொளுத்திப் போட்டு விட்டார்.

‘கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம் என்று மக்களிடம் கூறுகிறார் டிரம்ப்.

அமெரிக்காவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனாவுக்கு பலி கொடுத்து விட்டு, கொஞ்சமும் பொறுப்பில்லாமல் அவர், இப்படி கூறியிருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் அவருடன் பணியாற்றிய 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை அவர் பரப்பிக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் அதிவேகமான தொற்று நோயான கொரோனாவை எதிர்கொண்ட விதம், டிரம்ப் அரசுக்கு மிகப்பெரிய தோல்விதான்.

இதை மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்’ என்று கொதிப்புடன் கூறியிருக்கிறார். நிச்சயம் இது தொடர்பான கேள்விகளை இன்றைய விவாதத்தில் கமலா ஹாரிஸ் எழுப்புவார்.

ஏற்கனவே டிரம்ப்பின் கோமாளித்தனமான செயல்களால் வெறுப்பில் உள்ள மக்களிடம், இந்த கேள்விகள் சரியாக சென்று சேரும் என்பதால் குடியரசு கட்சியின் தலைவர்கள் பதற்றத்தில் உள்ளனர்.

.

மூலக்கதை