கொரோனா பிடியில் இருந்து மீண்டு வெள்ளை மாளிகை திரும்பினார் டிரம்ப்: 15ம் தேதி ஜோ பிடனுடன் தேர்தல் விவாதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பிடியில் இருந்து மீண்டு வெள்ளை மாளிகை திரும்பினார் டிரம்ப்: 15ம் தேதி ஜோ பிடனுடன் தேர்தல் விவாதம்

வாஷிங்டன்: கொரோனா பிடியில் இருந்து மீண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று அதிகாலை வெள்ளை மாளிகை திரும்பினார். வரும் 15ம் தேதி ஜோ பிடனுடன் விவாதம் நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இருந்தும், கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த மாதம் (நவம்பர்) அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது.

தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அதிபர் டிரம்ப் நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களுக்கு சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அவருடன் அவரது மனைவி மெலனியாவும் பிரசாரத்திற்கு சென்றார்.

இந்நிலையில், டிரம்புக்கும், அவரது மனைவி மெலனியாவுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து கடந்த சனிக்கிழமை வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அதிபர் டிரம்ப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டே அலுவலக பணிகளை மேற்கொண்டார்.   கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டிரம்ப், நேற்று காலை திடீரென மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்த ரசிகர்களையும், ஆதரவாளர்ளையும் பார்த்து கையசைத்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கே சென்றார். இதற்கிடையே, இந்திய நேரப்படி இன்று அதிகாலை, அதிபர் டிரம்ப் கொரோனா பிடியில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.



ராணுவ மருத்துவமனையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகை புறப்பட்டார். அதிபர் டிரம்ப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறித்து  அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழு கூறுகையில்,‘டிரம்புக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு  இயல்பாக உள்ளது.

ரெம்டெசிவர் மருந்து 5வது டோஸ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு செல்லும் அளவு அவர் உடல் நலம் தேறிவிட்டார்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘வரும்  15ம் தேதி ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுடன் நடைபெற உள்ள விவாதத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளார்’என்று தெரிவித்தார்.

டிரம்ப் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கவுள்ளதால், மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை