மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா, தேசியவாத காங்., பேச்சு

தினமலர்  தினமலர்
மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா, தேசியவாத காங்., பேச்சு

மும்பை: மஹாராஷ்டிராவில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு ஆட்சி அமைப்பது குறித்து, சிவசேனா, காங்., தேசியவாத காங்., தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றபோதும், கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க, சிவசேனா தலைவர்கள் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், எப்படியாவது ஆட்சி அமைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், சிவசேனா தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., தலைவர்களுடன் தீவிரமாக பேச்சு நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காங்., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: மூன்று கட்சி தலைவர்களும் பேச்சு நடத்தி வருகின்றனர். முதலில், குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியாவும், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரும், வரும், 17ம் தேதி டில்லியில் பேச்சு நடத்தவுள்ளனர். அதில் சுமுக முடிவு எட்டப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது: ஆட்சி அமைப்பதற்கான பேச்சு, சுமுகமாக நடந்து வருகிறது. மஹாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனாவுக்கு இடையே அதிகாரப்பகிர்வு குறித்து, பா.ஜ., தலைவர் அமித் ஷாவுடன் நடந்த பேச்சில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அவர், அதை பிரதமர் மோடியிடம் தெரிவிக்கவில்லை என்பது, தற்போது தெரியவந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை