நண்பர்களானது எப்படி... ஜின்பிங்கிடம் மோடி உருக்கம்!

தினமலர்  தினமலர்
நண்பர்களானது எப்படி... ஜின்பிங்கிடம் மோடி உருக்கம்!

பிரேசிலா: பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே, சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகள் உட்பட பல்வேறு சர்வதேச பிரச்னைகள் குறித்து, இருவரும் ஆலோசித்தனர்.

கடந்த மாதம், தமிழகத்தின் மாமல்லபுரத்துக்கு ஜின்பிங் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, இரு தலைவர்களும் தனிமையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினர். இதற்கிடையே, இந்த மாதம் நடந்த ஆசியான் மாநாட்டின்போது, சீனாவின் முயற்சியால், 16 நாடுகள் இடம்பெறும், தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதில் பங்கேற்க, மோடி மறுத்துவிட்டார்.

இந்நிலையில், இரு தலைவர்களும் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, இருவருக்கும் இடையேயான, மூன்றாவது முறைசாரா உச்சி மாநாட்டுக்காக, சீனாவுக்கு வரும்படி, மோடிக்கு ஜின்பிங் அழைப்பு விடுத்தார்.


இந்த சந்திப்பின்போது மோடி கூறியதாவது: உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நம் முதல் சந்திப்பு பிரேசிலில் தான் நடந்தது. அப்போது இருவருக்கும் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில், நாம் மிகவும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். பல்வேறு அமைப்புகளிலும் நாம் சந்தித்தோம். நீங்கள் என்னுடைய சொந்த மாநிலத்துக்கு வந்தீர்கள். உங்களுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றீர்கள்.

இந்த ஐந்து ஆண்டுகளில், நம்முடைய நட்பு, பிணைப்பு மற்றும் நம்பிக்கை அபரிமிதமாக வளர்ந்து உள்ளது. மாமல்லபுரத்துக்கு வந்து, நம்முடைய உறவில் புதிய பாதையை மற்றும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தினீர்கள். இவ்வாறு, அவர் பேசினார். மாமல்லபுரத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மற்றும் அழைப்புக்கு, ஜின்பிங் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மூலக்கதை