அடுத்தாண்டு நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் 'சந்திரயான் 3'

தினமலர்  தினமலர்
அடுத்தாண்டு நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் சந்திரயான் 3

பெங்களூரு: 'சந்திரயான் - 3' விண்கலம் மூலம், செலுத்தப்படும், 'லேண்டர்' சாதனத்தை, நிலவின் தென் பகுதியில், அடுத்த ஆண்டு நவம்பர் மாதம், தரையிறக்க, இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக, 'சந்திரயான் - 2' விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, சமீபத்தில் நிலவுக்கு அனுப்பியது. விண்கலத்தில் இருந்த விக்ரம் எனும், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்க, 2.1 கி.மீ., தொலைவில் இருந்த நேரத்தில், திடீரென பூமியுடனான அதன் தொடர்பு, துண்டிக்கப்பட்டது.கட்டுப்பாட்டை இழந்த லேண்டர் சாதனம், நிலவின் மேற்பரப்பில், சாய்ந்த நிலையில் கிடப்பதாக கூறப்பட்டது. லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த, இஸ்ரோ பலமுறை முயற்சித்தும், பலன் அளிக்கவில்லை.


இந்நிலையில், சந்திரயான் - 3 திட்டத்தின் மூலம், அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில், லேண்டரை நிலவில் தரையிறக்க, இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. 'சந்திரயான் - 2 திட்டத்தில் இருந்த குறைகள் களையப்பட்டு, லேண்டரின் கால்கள், வலுவாகவும், கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் விதத்திலும், வடிவமைக்கப்படும்' என, இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

'சந்திரயான் - 3' திட்டம் குறித்து, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் சோம்நாத் தலைமையில், உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இத்திட்டம் குறித்து, இந்த ஆண்டு இறுதிக்குள், அறிக்கை தயார் செய்ய, இக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலவின், '3டி'படம் வெளியானது!'


சந்திரயான் - 2'வின், 'ஆர்பிட்டர்' அனுப்பிய புதிய புகைப்படத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டனர். '3டி' எனப்படும் முப்பரிமாணம் கொண்ட இந்த புகைப்படத்தில், நிலவின் மேற்பரப்பில் உள்ள பெரிய பள்ளம், தெள்ளத்தெளிவாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை