உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி சபரிமலைக்கு செல்ல 133 பெண்கள் முன்பதிவு : இந்து அமைப்புகள் எதிர்ப்பால் பதற்றம்

தினகரன்  தினகரன்
உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி சபரிமலைக்கு செல்ல 133 பெண்கள் முன்பதிவு : இந்து அமைப்புகள் எதிர்ப்பால் பதற்றம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கலாம் என்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காததால் மீண்டும் இளம் பெண்கள் செல்ல வாய்ப்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கு பா.ஜ, உட்பட இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சபரிமலையில் மீண்டும் கலவர அபாயம் ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பின்னர் கடந்த மண்டல காலம் முழுவதும் சபரிமலையில் பெரும் பதட்டம் நிலவியது. தரிசனத்திற்கு வந்த இளம் பெண்களை இந்து அமைப்பினர் தடுத்ததால் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்த நிலையில் இந்து அமைப்புகளின் சீராய்வு மனு மீது நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வழக்கை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதுவரை பெண்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.இந்நிலையில் சபரிமலையில் தரிசனத்திற்காக 133 இளம் ெபண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். மனிதி அமைப்பினரும், கடந்த ஆண்டு வந்து தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிய திருப்தி தேசாயும் இந்த ஆண்டும் வர உள்ளதாக அறிவித்துள்ளனர். அதுபோல் கடந்த ஆண்டு சபரிமலை சென்ற பிந்து அம்மணி, இந்த ஆண்டு சபரிமலை செல்ல உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் சபரிமலைக்கு பெண்கள் வந்தால் தடுப்போம் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ, பொது செயலாளர் சுரேந்திரன், சபரிமலை விவகாரத்தில் கடந்த ஆண்டு வந்த தீர்ப்பில் தவறு இருந்ததாக நீதிமன்றத்திற்கு தெரிந்ததால் தான் 7 பேர் கொண்ட அமர்வுக்கு விடப்பட்டுள்ளது. எனவே கேரள அரசு மீண்டும் இளம் பெண்களை கொண்டு வந்து பக்தர்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைககளில் ஈடுபடக்கூடாது. இறுதி தீர்ப்பு வரும் வரை பழைய நிலை தொடர வேண்டும். கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கவில்லை என்று கூறி தன்னார்வலர்களை சபரிமலை கொண்டு வர முயன்றால் பா.ஜ., கடுமையாக எதிர்க்கும் என்றார். பெண்கள் வருகைக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டும் சபரிமலைக்கு பெண்கள் வந்தால் கடும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை 5 கட்டங்களாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முதல் கட்டமாக இன்று முதல் 30ம் தேதிவரை சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி, பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் 2551 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சபரிமலை தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பக்கூடாது. அவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார்.சபரிமலை செல்வேன் -திருப்தி தேசாய்மும்பையை சேர்ந்த சமூக சேவகர் திருப்தி தேசாய், சில பெண்களுடன் கடந்த ஆண்டு சபரிமலை ெசல்ல விமானம் மூலம் கொச்சி வந்தார். இது குறித்து அறிந்த இந்து அமைப்பினர் விமான நிலைய வாசலில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் திருப்தி ேதசாய் மற்றும் குழுவினர் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பல மணிநேரத்திற்கு பின் சபரிமலை செல்ல முடியாமல் திரும்பி சென்றனர். இந்நிலையில் மும்பையில் திருப்தி தேசாய் கூறுகையில், இளம் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த முறை வழங்கிய தீர்ப்பிற்கு எந்த தடையும் விதிக்கவில்ைல. இதனால் இந்த ஆண்டு மீண்டும் கண்டிப்பாக சபரிமலை செல்வேன் என்றார்.கடந்த ஆண்டு போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்ற பிந்து அம்மணி மற்றும் கனகதுர்கா கூறியதாவது: சபரிமலையில் இளம்பெண்கள் விவகாரத்தில் 7 பேர் கொண்டு அமர்வுக்கு மாற்றப்பட்டதால் எங்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்ைல. கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படாததால் மீண்டும் நாங்கள் சபரிமலை செல்வோம். சபரிமலை வரும் இளம் பெண்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்.சட்ட நிபுணர்களை ஆலோசித்த பின் முடிவுஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் அளித்த பேட்டி: சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் வழக்கை 7 நீதிபதிகள் ெகாண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. கடந்த ஆண்டு அளித்த உத்தரவுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. எனவே அந்த உத்தரவு இப்போதும் அமலில் உள்ளது என்றுதான் கருதுகிறேன். ஆனாலும் இதில் இன்னும் தெளிவு ஏற்படவேண்டியுள்ளது. இந்த அமர்வில் இடம் பெற்றவர்கள்தான் மீண்டும் இந்த வழக்கை பரிசீலிப்பார்களா அல்லது வேறு 7 பேர் ெகாண்ட அமர்வு விசாரிக் குமா என்பதில் தெளிவு வேண்டும். 5 பெர் கொண்ட அமர்வின் தீர்ப்பிற்கு எதிராக தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதை நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. பழைய தீர்ப்பை திருத்தவும் இல்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்த பின்னரே இளம் பெண்களை அனுமதிப்பது குறித்து தீர்மானிக்கப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும்போது ஏற்படும் எதிர்விளைவுகள் குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. எனவே தீர்ப்பு குறித்து உடனடியாக எந்த கருத்தையும் கூற முடியாது. எனவே இந்த தீர்ப்பில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. அதற்கு தீர்வு கண்டுவிட்டு முடிவு எடுக்கப்படும். கோயில் நடைதிறப்புசபரிமலை  ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக கோயில் நடை நாளை (16ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று ேவறு சிறப்பு பூஜைகள் எதுவும்  நடக்காது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேல்சாந்திகளான சபரிமலை மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி, மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தி பரமேஸ்வரன்  நம்பூதிரி ஆகிய இருவரும் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி மட்டும் நடக்கும்.மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல காலம்  தொடங்குகிறது. புதிய மேல்சாந்தி  பூஜைகளை நடத்துவார். 41 நாள் நடக்கும் பூஜை டிசம்பர் 27ம் தேதி நிறைவடைகிறது. அன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை  நடைபெறும்.தலைவர்கள் கருத்துஎதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா: உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இனியும் போலீசார் சபரிமலைக்கு இளம் பெண்களை அழைத்து வரக்கூடாது. பள்ளிவாசல், சர்ச், கோயில் எதுவாக இருந்தாலும் நம்பிக்கைக்குதான் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி: சபரிமலை இளம்பெண்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி மேற்கொண்ட நிலைப்பாடு சரி என்று இப்போது நிரூபணம் ஆகியுள்ளது. 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டதன் மூலம் பக்தர்களின் நம்பிக்கை பாதுகாக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு கேரள அரசு தன்னார்வலர்களை  கொண்டு சென்றதால் தான் கலவரம் வெடித்தது. எனவே, அது போன்ற நடவடிக்கைகளில் அரசு இனியும் ஈடுபடக்கூடாது. வரும் மண்டல காலத்தில் சபரிமலையில் எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தேவசம்போர்டுஅமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்: சபரிமலை விவகாரத்தில் கடந்த காலங்களில் செய்ததுபோல எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயலக்கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. எதிர்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது. பந்தளம் அரண்மனை பிரதநிதி சசிகுமார் வர்மா: சபரிமலை விவகாரத்தில் 5 பேர் கொண்ட அமர்வின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்பு தவறு என்று கருதப்பட்டதால் தான் 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நீண்ட காலமாக பக்தர்கள் மனதில் இருந்த வலி குறைந்துள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் முடிவாகும். சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சுதீர்நம்பூதிரி கூறியது: சபரிமலையில் பூஜை நடத்துவது மட்டுமே எனது குறிக்கோள். வரும் மண்டல காலம் மிகவும் அமைதியான முறையில், பக்தியுடன் நடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பம். உச்சநீதிமன்ற தீர்ப்பு ஐயப்பனின் விருப்பப்படியே வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மூலக்கதை