பயங்கரவாதத்தின் டிஎன்ஏ பாக்.,: இந்தியா பதிலடி

தினமலர்  தினமலர்
பயங்கரவாதத்தின் டிஎன்ஏ பாக்.,: இந்தியா பதிலடி

பாரீஸ்: காஷ்மீர் குறித்து பொய் பிரசாரம் செய்து வரும் பாகிஸ்தான் தான், பயங்கரவாதத்தின் டிஎன்ஏவாக உள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த யுனெஸ்கோவின் பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய குழுவிற்கு தலைமை தாங்கிய அதிகாரி அனன்யா அகர்வால் பேசுகையில், பாகிஸ்தானின் நடவடிக்கைகளை , அதன் பலவீனமான பொருளாதாரம், பிரிவினைக்கு உள்ளான சமூகம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்நாடு. பயங்கரவாதத்திற்கு டிஎன்ஏவாக உள்ளது. இந்தியாவுக்கு எதிராக விஷம் கக்கவும், அரசியல் செய்யவும் யுனெஸ்கோவை பயன்படுத்தும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

அனைத்து வகையான பயங்கரவாதம், தீவிரவாத கொள்கை, பிரிவினைவாத சக்திகள் ஆகியவற்றின் பிறப்பிடமாக பாகிஸ்தான் உள்ளது. மற்ற நாடுகளுக்கு எதிராக அணு ஆயத போர் என மிரட்டவும், ஆயுதங்களை பயன்படுத்துவோம் என எச்சரிக்வும் ஐ.நா., அமைப்புகளை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. பயங்கரவாதிகளான ஒசாமா பின்லாடன், ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் பாகிஸ்தானின் கதாநாயகர்கள் என, அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.

தனது சொந்த மண்ணில் உள்ள சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்க முடியாமல், சர்வதேச அளவில், இந்தியாவிறகு எதிராக அவதூறு பரப்ப பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. கடந்த 1947 ல் பாகிஸ்தானில் 23 சதவீதமாக இருந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை, தற்போது 3 சதவீதமாக குறைந்து விட்டது. கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், அஹமதியர்கள், ஹிந்துக்கள், ஷியா பிரிவினர், சிந்துக்கள், பலுசிஸ்தானியர்கள் மீது மத துவேச சட்டங்களை பயன்படுத்தப்படுகிறது. அவர்கள், கட்டாயமாக மதமாற்றம் செய்யபடுகின்றனர். பெண்கள் மீது பாலியல் ரீதியிலான துன்புறுத்தல், ஆணவ கொலை, ஆசீட் வீச்சு, கட்டாய திருமணம், குழந்தை திருமணம் ஆகியவை இன்னும் பாகிஸ்தானில் நடந்து கொண்டு தான் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை