அமெரிக்க அதிபர் பதவி நீக்க விசாரணை தூதர் உட்பட 2 உயரதிகாரிகள் டிரம்புக்கு எதிராக சாட்சியம்

தினகரன்  தினகரன்
அமெரிக்க அதிபர் பதவி நீக்க விசாரணை தூதர் உட்பட 2 உயரதிகாரிகள் டிரம்புக்கு எதிராக சாட்சியம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையில், உக்ரைன் விவகாரங்களுக்கான அமெரிக்கா தூதர் உட்பட இரு உயர் அதிகாரிகள் வலுவான சாட்சியம் அளித்தனர். அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். இவரது மகன் ஹன்டர் பிடென் உக்ரைனில் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனத்தில் போர்டு உறுப்பினராக உள்ளார்.  இங்கு எழுந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்த அரசு வக்கீலை டிஸ்மிஸ் செய்யக்கோரி உக்ரைன் அதிபரிடம், ஜோ பிடென் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போன் மூலம் கடந்த ஜூலை 25ம் தேதி கூறியுள்ளார். மேலும், இந்த உதவியை செய்வதற்காகவே உக்ரைனுக்கு வழங்க வேண்டிய அமெரிக்க பாதுகாப்பு நிதி 400 மில்லியன் டாலரை நிறுத்தி வைத்து கடந்த செப்டம்பரில் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் எதிரியை பழிவாங்க, தனது அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தி, உக்ரைன் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதால், அந்தக் கட்சி, அதிபர் டிரம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தது. இதன் விசாரணை அமெரிக்க நாடாளுமன்ற அறையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் உக்ரைன் விவகாரங்களை கவனிக்கும் தூதர் பில் டெய்லர், இணை செயலாளர் ஜார்ஜ் கென்ட் ஆகியோர் சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் ஜனநாயக கட்சி சார்பில் ஆஜரான வக்கீல்கள் டேனியல் கோல்ட்மேன், ஸ்டீவ் காஸ்டர் ஆகியோர் கேள்வி கேட்டனர். பில் டெய்லர் கூறுகையில், ‘‘ஜோ பிடென் மீதான விசாரணை விவரம் குறித்து  ஐரோப்பிய யூனியனுக்கான அமெரிக்க தூதர் கார்டன் சோண்ட்லேண்டிடம் அதிபர் டிரம்ப் கடந்த ஜூலை 26ம் தேதி பேசியதை எனது உதவியாளர் டேவிட் ஹால்ம்ஸ் ஒட்டு கேட்டுள்ளார். ஜோ பிடென் மீது உக்ரைன் விசாரணை நடத்த நியூயார்க் முன்னாள் மேயர் ரூடி கிலியானியும், டிரம்ப்பின் வக்கீலும் அழுத்தம் கொடுத்தது முறையற்ற செயல்’’ என்றார். மற்றொரு அதிகாரி ஜார்ஜ் கென்ட் அளித்த சாட்சியத்திலும், ‘‘அரசியல் எதிரிகளை பழிவாங்க, அடுத்த நாடுகளை அமெரிக்க ஈடுபடுத்தக் கூடாது’’ என்றார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதன் பின் இதுகுறித்து செனட் சபையில் விசாரிக்கப்படும். அங்கு குடியரசு கட்சிக்கு 53-47 என்ற அளவில் ஆதரவு உள்ளது. இதனால் தீர்மானம் தோல்வி அடையும்.‘எதுவும் ஞாபகம் இல்லை’இந்த சாட்சியங்கள் குறித்து பேட்டியளித்த அதிபர் டிரம்ப், ‘‘ஐரோப்பிய யூனியனுக்கான அமெரிக்க தூதர் சோண்ட்லேண்டிடம், பேசியதாக எனக்கு ஞாபகம் இல்லை. இதெல்லாம் மூன்றாம் நபர் தகவல்கள். இந்த பதவி நீக்க விசாரணை எனக்கு தொல்லை கொடுக்கும் செயல். இதை பார்க்க எனக்கு நேரமில்லை’’ என்றார்.

மூலக்கதை