'இந்தியாவில் முதலீடு செய்வதற்கு கணக்கிலடங்கா வாய்ப்புகள் உள்ளன'

தினமலர்  தினமலர்
இந்தியாவில் முதலீடு செய்வதற்கு கணக்கிலடங்கா வாய்ப்புகள் உள்ளன

பிரேசிலா: ''முதலீட்டுக்கு உகந்த, உலகின் மிகப் பெரிய மற்றும் சிறந்த நட்பு நாடாக இந்தியா உள்ளது. இங்கு முதலீடுகள் செய்வதற்கு கணக்கிடலங்கா வாய்ப்புகள், எல்லையில்லா சாதகங்கள் உள்ளன. இதை பயன்படுத்திக் கொள்ளும்படி அழைக்கிறேன்,'' என, 'பிரிக்ஸ்' வர்த்தக அமைப்பின் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய மிகவும் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பே, 'பிரிக்ஸ்' அமைப்பு. பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில், இணைந்து செயல்படுவதற்காக அமைக்கப்பட்டது இந்த அமைப்பு. இந்த அமைப்பின், 11வது மாநாடு, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக சென்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நடந்த, பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் பேசியதாவது: உலகெங்கும் பொருளாதார மந்தநிலை உள்ள போதும், நம்முடைய ஐந்து நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து முன்னேற்ற பாதையில் உள்ளது. உலகளவில் முதலீடு செய்வதற்கு மிகப் பெரிய மற்றும் சிறந்த நட்பு நாடாக இந்தியா உள்ளது. நிலையான அரசியல் சூழ்நிலை, முதலீட்டுக்கு உகந்த கொள்கைகள் மற்றும் வர்த்தகத்துக்கு உகந்த சீர்திருத்தங்கள் போன்றவை, இதற்கு காரணமாக உள்ளன.

வரும், 2024ம் ஆண்டுக்குள், நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதனால், கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகள் தேவைப்படுகின்றன. இந்தியாவில் உள்ள எல்லையற்ற சாதகங்கள் மற்றும் கணக்கிலடங்கா வாய்ப்புகளை, முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களால் இந்தியா வளர்வதுடன், நீங்களும் வளர்ச்சியைக் காண முடியும்.

உலகப் பொருளாதாரத்தில், 50 சதவீதத்தை, நம்முடைய ஐந்து நாடுகள் கொண்டுள்ளன. ஒரு நாட்டில் தொழில்நுட்பம் இருக்கும்; ஒரு நாட்டில் மூலப் பொருட்கள் இருக்கும்; மற்றொன்றில் சந்தைப்படுத்த அதிக வாய்ப்பு இருக்கும். இவ்வாறு நம்முடைய ஐந்து நாடுகளுக்கு இடையே, வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் எவை என்பதை உணர்ந்து, அதற்கேற்ப செயல்பட அழைக்கிறேன். இதற்கான, ஒரு செயல் திட்டத்தை வகுத்து செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

மோடிக்கு புடின் அழைப்பு:

பிரிக்ஸ் மாநாட்டின் இடையே, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்தும், ஒத்துழைப்புகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இரு தரப்பு ஒப்பந்தங்களின்படி நடைபெற்று வரும் பணிகள், திட்டங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும், பல்வேறு சர்வதேச பிரச்னைகள் குறித்தும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பின்போது, அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் வெற்றி விழாவில் பங்கேற்கும்படி, மோடிக்கு ரஷ்ய அதிபர் அழைப்பு விடுத்தார். நாஜி படைகளுக்கு எதிராக, 1945ல் வென்றதை குறிக்கும் வகையில், வெற்றி விழாவை, ரஷ்யா கொண்டாடி வருகிறது. "நாம் அடிக்கடி சந்திப்பதன் மூலம், நம்முடைய உறவு மேலும் வலுப்பெற்று வருகிறது. உங்களை மே மாதத்தில் ரஷ்யாவில் சந்திக்க ஆவலாக உள்ளேன்," என, மோடி குறிப்பிட்டார்.

மூலக்கதை