பழுதான பள்ளி கட்டடங்களை அகற்ற சி.இ.ஓ., பரிந்துரை! பணியை விரைவுபடுத்த பெற்றோர் கோரிக்கை

தினமலர்  தினமலர்
பழுதான பள்ளி கட்டடங்களை அகற்ற சி.இ.ஓ., பரிந்துரை! பணியை விரைவுபடுத்த பெற்றோர் கோரிக்கை

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள 40 வகுப்பறைகளை இடித்து அகற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிந்துரை செய்துள்ளார்.

கடலுார் மாவட்டத்தில், கடலுார், சிதம்பரம், வடலுார், விருத்தாசலம் என நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 1,715, மற்றும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., என 518 தனியார் பள்ளிகள் என, மொத்தம் 2 ஆயிரத்து 233 பள்ளிகள் உள்ளன.இவற்றில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 775 பேர் என தனியார் பள்ளிகள் உட்பட ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பருவமழை துவங்கியுள்ளதை யொட்டி, மாணவர்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள ஆபத்தான வகுப்பறை கட்டடங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடித்து அப்புறப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கடலுார் மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் பயன்பாடின்றி பழுதடைந்துள்ள ஆபத்தான கட்டடங்கள் குறித்த விபரங்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டன.மாவட்டம் முழுவதும் கடலுார், வடலுார், விருத்தாசலம், சிதம்பரம் கல்வி மாவட்டங்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் என 292 பள்ளிகள் உள்ளன. இவற்றில், 40 பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள் பழுதடைந்துள்ளது கண்டறியப்பட்டு, அவற்றை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பழுதடைந்த பள்ளி கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.விரைவில் பழுதடைந்த பள்ளி கட்டடங்கள் இடித்து அகற்றப்பட உள்ளன.

இது குறித்து சி.ஐ.ஓ., வெற்றிச்செல்வி கூறுகையில், ' மாவட்டம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள 40 கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. -தொடர்ச்சி ௩ம் பக்கம்பழுதடைந்த கட்டடங்களில் மாணவ, மாணவிகள் செல்லாத வகையில், பூட்டப்பட்டு, முட்கள் போட்டு அடைக்கப்பட்டுள்ளன. பழுதடைந்த கட்டடங்களில் பாதுகாப்பு குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கட்டடங்களை இடித்து அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவை விரைவில் இடித்து அகற்றப்படும்' என்றார்.

மாவட்டம் முழுவதும் பழுதடைந்து பயன்பாடின்றி, மாணவ, மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள பள்ளி கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை