நாளை இந்தூரில் முதல் டெஸ்ட்: கோஹ்லி தலைமையில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை இந்தூரில் முதல் டெஸ்ட்: கோஹ்லி தலைமையில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தூர்: வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை இந்தூரில் துவங்குகிறது. இப்போட்டி நடைபெற உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று கேப்டன் விராட் கோஹ்லி தலைமையில் இந்திய வீரர்கள்  தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை துவங்குகிறது. முதல் போட்டி நாளை இந்தூரில் துவங்க உள்ளது.

2வது டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.   கொல்கத்தா போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதன் முதலாக இந்திய மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளன.

தவிர முதன் முதலாக இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்தை எதிர்கொள்ள தயாராகத்தான் இருக்கிறோம் என இந்திய அணியின் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் இந்தூர் டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ள நிலையில் இந்திய அணியின் வீரர்கள் போட்டி நடைபெற உள்ள ஹோல்கார்  கிரிக்கெட் மைதானத்தில் நேற்று கேப்டன் விராட் கோஹ்லி தலைமையில் தீவிர வலை பயிற்சி மேற்கொண்டனர். 2 கட்டங்களாக நடந்த இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பீல்டிங் முற்பகலிலும், பவுலிங் பயிற்சி பிற்பகலிலும் நடந்தது.

முன்னதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. டி20 தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால், வங்கதேச அணியின் வீரர்களும் டெஸ்ட் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றனர்.

வங்கதேச அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மொஹமது மிதுன் கூறுகையில், ‘தன்னம்பிக்கைதான் முக்கியம். நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

டி20 தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றது போல, டெஸ்ட் தொடரிலும் ஒரு போட்டியில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

தவிர கடந்த 2 ஆண்டுகளில் எங்கள் அணியின் வீரர்கள் குறிப்பிடத்தக்க வகையில் டெஸ்ட் போட்டிகளில் எதிரணிகளுக்கு நெருக்கடியை அளித்துள்ளனர். மேலும் இந்தியாவின் பருவநிலை, மைதானங்களின் அமைப்பு போன்ற விஷயங்கள் எங்களுக்கு நன்கு பரிச்சயமானவைதான்.

வங்கதேச அணியின் பருவநிலைக்கும், மைதானங்களின் அமைப்புக்கும் இங்குள்ள நிலைகளுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் கிடையாது. இதனால் சொந்த மண்ணில் ஆடுவது போன்ற உணர்வு இருக்கும்.

ஆனால் ரசிகர்களின் ஆதரவு மட்டும் இருக்காது’’ என்று தெரிவித்துள்ளார்.

‘வங்கதேச அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இந்திய அணியின் வீரர்களிடம் கூறியுள்ளேன்’ என்று  அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை