மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலானாலும் பெரும்பான்மை பலமுள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலானாலும் பெரும்பான்மை பலமுள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமலாகியுள்ள நிலையிலும் பெரும்பான்மையுள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடந்தது.

289 உறுப்பினர் கொண்ட சட்டப்பேரவையில், பாஜ 105 இடத்திலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 44 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின.

பா. ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தது. ஆனால், இரண்டு கட்சிகளும் முதல்வர் பதவி கேட்டதால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜவை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். பெரும்பான்மை இல்லாததால் பாஜவுக்கு ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.



தொடர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அமைக்க முற்பட்டது. ஆனால், அதுவும் கடைசி நேரத்தில் முடியாமல் போனது.

தேர்தல் நடந்து சுமார் 20 நாட்களாகியும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு மத்திய பாஜ அரசு பரிந்துரைத்தது.

பரிந்துரையை ஏற்று, குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார். அதன்படி, மகாராஷ்டிராவில் நேற்று முதல் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் ஆட்சி அமைக்க கோரலாமா என்பது குறித்து தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர் அளித்த விளக்கம்:  மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவின்படி நேற்று முதல் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து நிர்வாகப் பணிகளும் குடியரசு தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர் இனி மேற்கொள்வார்.

சுமார் 1 வருடம் காலம்தான் ஒரு மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும். இந்த இடைப்பட்ட காலத்திற்குள் பெரும்பான்மை உள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்.

அப்படி பெரும்பான்மையை நிரூபித்தால் குடியரசு தலைவர் ஆட்சி உடனடியாக விலக்கி கொள்ளப்படும். ஒரு வருடத்திற்குள் ஆட்சி அமைக்கப்படவில்லை என்றால் சட்டப்பேரவை கலைக்கப்படும்.

அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி அமைக்கும். இதுதான் விதிமுறையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை