மராட்டியத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் 'சரியான திசையில்' முன்னேறி வருகின்றன : சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மராட்டியத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் முன்னேறி வருகின்றன : சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாக  சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தகவல் தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்பட்டு உள்ள நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது. மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலப்படுத்தப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க விடுக்கப்பட்ட தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். குறைந்தபட்ச செயல்திட்டத்துடன்,  மாற்று தத்துவங்களை கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடியும் என்றும் உத்தவ் தாக்கரே கூறினார். இதையடுத்து இன்று  மும்பையில் உள்ள புறநகர் ஹோட்டலில் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத், முன்னாள் மாநில முதல்வர் அசோக் சவான் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் மாணிக்கராவ் தாகரே ஆகியோருடன் உத்தவ் தாக்கரே ஆலோசனையில் ஈடுபட்டார். சுமார் 1 மணி நேரம் நீண்ட இந்த ஆலோசனையில், கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, \'தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் \'சரியான திசையில்\' முன்னேறி வருகின்றன, சரியான நேரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்,\'என்று கூறினார். மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் *மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 21ம் தேதி நடந்தது. இதில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றின. *பாஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சிஅமைப்பதற்கான பெரும்பான்மை பலம் இருந்தும், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பங்கிட்டு கொள்ளும் விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டது. இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை தங்களுக்கு தர வேண்டுமென்பதில் சிவசேனா பிடிவாதமாக இருந்ததால், ஆட்சி அமைக்க விருப்பமில்லை என பாஜ அறிவித்தது.*அதைத்தொடர்ந்து 2வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். 24 மணி நேர கெடுவும் விதித்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள  சிவசேனா, பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க முயற்சி செய்தது.*ஆனால், ஆளுநர் விதித்த கெடுவுக்குள் அவ்விரு கட்சிகளும் எந்த உறுதியான முடிவையும் தெரிவிக்காததால், சிவசேனாவால் போதிய எம்எல்ஏக்கள் பலத்தை காட்ட முடியவில்லை. அதற்காக, கூடுதல் அவகாசம் கேட்டது. அதற்கு மறுத்து விட்ட ஆளுநர் கோஷ்யாரி, 3வது பெரிய கட்சி என்ற அடிப்படையில், தேசியவாத காங்கிரசுக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார். அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்எல்ஏ.க்களின் ஆதரவை காட்ட நேற்றிரவு 8.30 மணி வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது. *இந்நிலையில், ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘மாநிலத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. எனவே, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356ன்படி, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்யப்படுகிறது,’ என ஆளுநர் கோஷ்யாரி அறிவிக்க, உச்சகட்ட பரபரப்பு நிலவியது. *இது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மதியம் அவசர அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், ஆளுநரின் பரிந்துரை படி மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. *இதையேற்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.*அடுத்த 6 மாதத்திற்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி தொடரும். அதன்பிறகு மீண்டும் தேர்தலை நடத்தலாம். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 20 நாட்களாக மகாராஷ்டிராவில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. *இதற்கிடையே, ஆளுநர் தங்களுக்கு போதிய அவகாசம் அளிக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிவசேனா, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து இன்று புதிய மனு தாக்கல் செய்வதாக தெரிவித்துள்ளது. அதே சமயம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடரும் என அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதும் புதிய விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை