பாலியல் வழக்கு: ஆஸி., கார்டினல் மேல்முறையீடு

தினமலர்  தினமலர்
பாலியல் வழக்கு: ஆஸி., கார்டினல் மேல்முறையீடு

மெல்போர்ன்: குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்டினல் ஜார்ஜ் பெல்லின் (78) மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க ஆஸ்திரேலியா ஐகோர்ட் ஒப்பு கொண்டது. இந்த வழக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு வரும்.

போப் பிரான்சிஸ் ஆலோசகரான ஜார்ஜ் பெல், கடந்த 1990 களில் 13 வயது சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த டிசம்பரில் குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தண்டனை பெற்ற வாடிகனில் பணியாற்றிய முக்கியமான நபர் இவர் ஆவார். ஜார்ஜ் பெல், மெல்போர்னில் உள்ள புனித பாட்ரிக் தேவாலயத்தில் ஆர்க்கிபிஷப்பாக இருந்த போது முதல் குற்றம் நடந்தது. ஒரு மாதம் பின்னர், சிறுவன் ஒருவனின் பிறப்புறுப்பை, முறையின்றி தொட்டதாக புகார் கூறப்பட்டது.

தண்டனையை குறைக்க ஜார்ஜ் பெல், சட்ட நிபுணர்கள் முயற்சித்து வரும் நிலையில், ஏற்கனவே அவர், பல மாதம், மெப்போர்ன் சிறையில் தான் உள்ளார். ஐகோர்ட்டில்விசாரணை முடியும் வரை அவர் சிறையில் தான் இருக்க வேண்டியுள்ளது. ஜார்ஜ் பெல்லுக்கு விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியதை தொடர்ந்து மேல்முறையீட்டுக்கான விக்டோரியா நீதிமன்றத்தில் ஜார்ஜ் பெல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதம், இந்த மனு நிராகரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வில் 2 பேர் கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுவன் பொய்யர் அல்ல. உண்மைக்கான சாட்சி எனக்கூறினார். மற்றொரு நீதிபதி, சிறுவன் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார்.
பாலியல் துனபுறுத்தலுக்கு உள்ளான நபர், கடந்த 2015 ல் விக்டோரியா போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து, விசாரணை ஆரம்பமானது. மூடிய கோர்ட் அறையில் நடந்த விசாரணையில் அவர் கூறுகையில், தேவாலயத்தில் நடந்த விழாவில், தன்னையும், தனது நண்பரையும் பிடித்த ஜாரஜ் பெல், தனது உடையை அவிழ்த்து , பாலியல் துன்புறுத்தல் செய்தார். எங்களை விடும்படி எவ்வளவோ கெஞ்சியும் அவர் கேட்கவில்லை.
இரண்டாவது சிறுவன், தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி யாரிடமும் கூறவில்லை. ஆனால், அதிகளவு போதை பொருள் பயன்படுத்தியதால் சில வருடங்களுக்கு பின்னர் இறந்தார். அவர் இறப்பிற்கு பின்னர் தான் புகார் கொடுக்க முடிவு செய்தேன். சிலர், எனது சொந்த நலனுக்காக புகார் கூறுவதாக தெரிவித்தனர். ஆனால், இதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியாது. எனது உடல்நிலை எனது குடும்பம், ரகசியம் ஆகியவை தாண்டி புகார் கொடுத்துள்ளேன்.
இழப்பீடு கேட்கவில்லை. இது பணமோ அல்லது வேறு எதற்காகவும் இல்லை. எனக்கு என்ன நேர்ந்தது. என்ன பார்த்தேன் என்பதை நான் கூற வேண்டும். நான் குழந்தையாக இருந்த போது நடந்தது எனது வாழ்க்கையின் இருண்ட பகுதியில் ஒன்று. நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்து கூறுகிறேன் என தெரிவித்தார்.

மூலக்கதை