நாங்கள் யாருக்கும் அடிமையில்லை: கவர்னருக்கு நாராயணசாமி பதிலடி

தினமலர்  தினமலர்
நாங்கள் யாருக்கும் அடிமையில்லை: கவர்னருக்கு நாராயணசாமி பதிலடி

புதுச்சேரி: ''வெளிநாடு பயணம் செய்ய, முதல்வர் என்ற முறையில், என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமோ, அத்தனையும் கடைப்பிடித்துள்ளேன்,'' என, கவர்னருக்கு, முதல்வர் நாராயணசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நான்கு நாள் பயணமாக சிங்கப்பூர் சென்று வந்தார். 'முதல்வர் மற்றும் அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு, மத்திய அரசு விதிகளின்படி அனுமதி பெறப்பட்டதா; அவரது பயணம் குறித்து, பத்திரிகைகள் மூலமே அறிய முடிகிறது' என, கவர்னர் கிரண்பேடி, சமூக வலைதளம் மூலம் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து, முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி:


நான், மத்திய இணை அமைச்சராக பணியாற்றியுள்ளேன். மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநாடு செல்ல, என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது தெரியும்.

இதன்படி, அக்., 24ல், பிரதமர் மற்றும் உள்துறைக்கு, முதலீட்டாளர்களை சந்திக்க, தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் செல்ல உள்ளோம் என தெரிவித்து, கடிதம் எழுதினேன். 29ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சகம், அரசியல் தடை நீக்கல் சான்றிதழ் கொடுத்துள்ளது. விதிமுறைகளை பின்பற்றி, அனைத்து அனுமதியும் பெற்று தான் சென்று வந்துள்ளோம்.
முழு விபரம் தெரியாமல், வெளிநாடு செல்ல யார் அனுமதி கொடுத்தது, யார் செலவு செய்தது என, கவர்னர் கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள், யாருக்கும் அடிமை கிடையாது. நாங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளோம். கவர்னரின் செயல்பாடுகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


மூலக்கதை