தேர்தலுக்கு நிதியின்றி கலெக்டர்கள் தவிப்பு

தினமலர்  தினமலர்
தேர்தலுக்கு நிதியின்றி கலெக்டர்கள் தவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகளை செய்ய, நிதி இல்லாததால், மாவட்ட நிர்வாகங்கள் தவித்து வருகின்றன.

தமிழகத்தில், 2016 முதல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மத்திய அரசு நிதி வழங்குவதை குறைத்து விட்டது. இதனால், பல உள்ளாட்சி அமைப்புகளில் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சிகளில் கிடைக்கும் வரி வருவாயை பயன்படுத்தி, நிலைமை சமாளிக்கப் படுகிறது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், நிதி நிலைமை படுமோசமாக உள்ளது.

இதனால், மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றன. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி மற்றும் ஆணையத்தின் செயலர் எஸ்.பழனிசாமி ஆகியோர், நாள்தோறும் பல உத்தரவுகளை போட்டு வருகின்றனர்.

இதற்கான நிதி ஒதுக்கப்படாததால், மாவட்ட நிர்வாகங்கள் திணறுகின்றன. தேர்தல் முன்னேற்பாடுகளை செய்ய, உரிய நிதியை விடுவிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்கள் சிலர், நேரடியாகவே ஆணைய அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு, ஆணையத்தில் இருந்து, உரிய பதில் இல்லாததால், மாவட்ட கலெக்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மூலக்கதை