கார்த்திக்கு எதிரான வழக்கு; சாட்சியை மீண்டும் விசாரிக்க அனுமதி

தினமலர்  தினமலர்
கார்த்திக்கு எதிரான வழக்கு; சாட்சியை மீண்டும் விசாரிக்க அனுமதி

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் கணக்கில் காட்டப்படாத, 7.5 கோடி ரூபாய் விவகாரத்திலான வழக்கில், சாட்சியத்தை மீண்டும் விசாரிக்க, சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர், சென்னை, முட்டுக்காடு பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தை, 'அக்னி எஸ்டேட் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்திற்கு, ஏக்கர், 4.15 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளனர். விற்பனை ஒப்பந்தம், கார்த்தி மற்றும் அவரது மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், சந்தை மதிப்பு, 3 கோடி ரூபாய் என, குறிப்பிட்டுள்ளனர். மீதம் உள்ள, 1.25 கோடி ரூபாயை, கணக்கில் காட்டாத ரொக்கமாக பெற்றுள்ளனர். இதன்படி, மொத்த நிலத்துக்கும், ஸ்ரீநிதி, 1.35 கோடி ரூபாயும், கார்த்தி, 6.38 கோடி ரூபாயும், ரொக்கமாக வாங்கி உள்ளனர். இந்த பண பரிமாற்றத்தை, தங்களது ஆண்டு வருமான கணக்கில் காட்டவில்லை.

கடந்த, 2015, டிச., 1ல், 'அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டிங்' நிறுவனத்தில், வருமான வரி மற்றும் அமலாக்கத் துறை சேர்ந்து சோதனை நடத்தியது. அதில், பல்வேறு ஆவணங்கள் அடங்கிய, எலக்ட்ரானிக் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், பணம் மற்றும் காசோலையாக, யார் யாருக்கு செலுத்தினர் என்ற, தகவல்கள் அடங்கிய, கணினியில் பயன்படுத்தக்கூடிய, 'ஹார்டு டிஸ்க்'கையும் அமலாக்கத் துறை கைப்பற்றியது. அதில், கார்த்தி மற்றும் அவரது மனைவி பெயர்கள் இருந்தன. இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, வருமான வரி துறை சார்பில், சிறப்பு வழக்கறிஞர்கள் எம்.ஷீலா மற்றும் பாஸ்கரன் ஆஜராகினர்.

அப்போது, கார்த்தி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளுக்கான, சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. கார்த்தி சார்பில், வழக்கறிஞர்கள் ஜான் சத்தியன், நடராஜன் ஆஜராகி, வருமான வரி துறை சார்பில், கையெழுத்திடாத மற்றும் அதிகாரப்பூர்வமற்ற ஆவணங்களை ஆதாரமாக சமர்ப்பித்துள்ளதாக வாதாடினர்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வருமான வரி துறை தொடர்ந்த வழக்கில், முக்கிய ஆதாரமாக, 'ஹார்டு டிஸ்க்' உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும், நிலம் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அதில், ரொக்க பரிமாற்றம் நடந்துள்ளது. இதுதொடர்பான ஆதாரம், 'அக்னி பவுண்டேஷன்' நிறுவனத்தில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயப்பிரகாஷிடம் நடத்திய விசாரணையிலும் தெரிய வந்துள்ளது. அதனால், விற்பனை ஆவணம் மட்டுமல்லாமல், வாய்மொழி ஆதாரமும் உள்ளது. எனவே, வருமான வரித் துறை தொடர்ந்துள்ள, இரண்டு வழக்கிலும், மனுதாரர் சாட்சியமான ரோகன்ராஜை, மீண்டும் விசாரணைக்கு அழைக்க அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை