'சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்'

தினமலர்  தினமலர்
சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்

ஓமலுார் : ''நடிகர் சிவாஜி கணேசனுக்கு, அரசியலில் ஏற்பட்ட நிலை தான், கமலுக்கும் ஏற்படும்,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

சேலத்தில் நடந்த, திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, முதல்வர் பழனிசாமி நேற்று காலை, ஓமலுார், அ.தி.மு.க., புறநகர் கட்சி அலுவலகத்தில், நிர்வாகிகளுடன், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசித்தார்.பின், அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தலை நடத்த, தன்னாட்சி பெற்ற தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தேதியை அறிவிப்பர். உள்ளாட்சி தேர்தலில் அதிகமானோர் போட்டியிட உள்ளதால், முன்கூட்டியே அ.தி.மு.க.,வில் விருப்ப மனு வாங்கப்படுகிறது.அ.ம.மு.க.,விலிருந்து பலர், கட்சியில் இணைய பேச்சு நடத்துகின்றனர். அ.ம.மு.க., என்பது, கட்சியே கிடையாது.

அமெரிக்காவில் பேசும்போது, 'நான், மோடி நாட்டிலிருந்து வந்துள்ளேன்' என, தேனி எம்.பி., ரவீந்திரநாத் கூறியதில் தவறில்லை. தமிழகத்தில் சாலை விரிவாக்கம் செய்ய, உயர் மின் கோபுரம் அமைக்க, நிலம் கையகப்படுத்த முடியவில்லை. மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. மக்களும், ஊடகங்களும், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 'வெற்றிடம்' எனக் கூறும், நடிகர் கமல், விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?

திரைத் துறையில் சம்பாதித்த பின், அவருக்கு வயதாகிவிட்டது. படத்தில் நடிக்க, தகுந்த வாய்ப்பில்லாததால், அரசியலுக்கு வந்துள்ளார்.தமிழகத்தில் எத்தனை கிராமங்கள், என்னென்ன பிரச்னை உள்ளது என்பது கூட, அவருக்கு தெரியாது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு, அரசியலில் ஏற்பட்ட நிலை தான், கமலுக்கும் ஏற்படும். இவ்வாறு, முதல்வர் பழனிசாமி கூறினார்.

சிவாஜியை குறை கூறுவதா?'புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களுக்கு, நடிகர் சிவாஜி நிலை தான் ஏற்படும் என்று கூறுவதை கண்டிக்கிறோம்' என, சிவாஜி சமூக நலப் பேரவை தெரிவித்துள்ளது.

இது குறித்து, பேரவை தலைவர் சந்திரசேகரன் அறிக்கை: 'புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களுக்கு, நடிகர் சிவாஜி நிலை தான் ஏற்படும்' என, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., நேற்று, கிண்டலடித்துள்ளார். இதற்கு, கண்டனம் தெரிவிக்கிறோம்.'வயதானதால், நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கின்றனர்' என்றும், அவர் கூறியுள்ளார்.அப்படியானதால், எம்.ஜி.ஆரையும் சேர்த்தே, முதல்வர் இப்படி கூறியிருப்பார் என, நினைக்கிறேன்.

காங்., - அ.தி.மு.க., கூட்டணி இருந்தபோது, அ.தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தவர் சிவாஜி. அவரைப் பற்றி குறை கூற, யாருக்கும் அருகதை இல்லை.சிவாஜி நினைத்திருந்தால், அவருக்கு பதவிகள் தேடி வந்திருக்கும். அவருடைய சுயமரியாதையால், எந்த பதவியையும் தேடிப் போகவில்லை.சிவாஜி கட்சி ஆரம்பித்து, தோல்வி அடைந்ததற்கு காரணம், எம்.ஜி.ஆரின் ஆட்சி, அவருடைய துணைவி ஜானகி தலைமையில் தொடர வேண்டும் என்பதற்கு தான்.

இந்த வரலாறை, தமிழக முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டும். பதவியில் உள்ள வரை தான், இவர்களுக்கு மரியாதை. ஆனால், தமிழ் வாழும் வரை நடிகர் திலகத்தின் புகழ் நிலைத்திருக்கும். நாட்டுக்காக விளம்பரமில்லாமல் சேவையாற்றி, காமராஜரின் சீடராக தன் இறுதிக் காலம் வரை வாழ்ந்து மறைந்த, சிவாஜியை பற்றி கிண்டலடிப்பதை, தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.

மூலக்கதை