மோடியை அவதூறாக பேசிய சசி தரூருக்கு, 'வாரன்ட்'

தினமலர்  தினமலர்
மோடியை அவதூறாக பேசிய சசி தரூருக்கு, வாரன்ட்

புதுடில்லி: பிரதமர் மோடியை அவதுாறாக பேசியது தொடர்பான வழக்கில் ஆஜராகாததால், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரை கைது செய்ய, டில்லி நீதிமன்றம், 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர், சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசியதாவது: என்னிடம் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் ஒருவர், பிரதமர் மோடியை பற்றி சமீபத்தில் பேசினார். அப்போது, மோடி, சிவலிங்கத்தின் மீதுள்ள தேள் போன்றவர் என, அவர் குறிப்பிட்டார். தேளை கையால் தொட்டால் கொட்டி விடும் என்றும், சிவலிங்கத்தின் மீது இருப்பதால், அதை, செருப்பால் அடித்து விரட்டவும் முடியாது என்றும் அவர் கூறினார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பாலேயே, மோடியை எதுவும் செய்ய முடியவில்லை என்றும், அவர் தெரிவித்தார். இவ்வாறு, சசி தரூர் பேசினார்.

இதற்கு, பா.ஜ., தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். டில்லி மாஜிஸ்திரேட் நிதிமன்றத்தில் சசி தரூருக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு, 'சம்மன்' அனுப்பியும், சசி தரூர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, சசி தரூருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்து, மாஜிஸ்திரேட் நவீன் குமார் கஷ்யப் உத்தரவிட்டார். இந்த வழக்கை தொடர்ந்த, பா.ஜ., வைச் சேர்ந்த ராஜிவ் பப்பரோ, அவரது வழக்கறிஞரோ நிதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு, 500 ரூபாய் அபராதம் விதித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

மூலக்கதை