ஜார்க்கண்டிலும் பா.ஜ.,வுக்கு சிக்கல்; கூட்டணி கட்சிகள் தனித்து போட்டி

தினமலர்  தினமலர்
ஜார்க்கண்டிலும் பா.ஜ.,வுக்கு சிக்கல்; கூட்டணி கட்சிகள் தனித்து போட்டி

புதுடில்லி: மஹாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில், விரைவில் தேர்தலை சந்திக்கும் ஜார்க்கண்டிலும், பா.ஜ.,வுக்கு தேர்தலுக்கு முன்பே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில், மொத்தமுள்ள, 81 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 30ல் இருந்து ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. கடந்த, 2014ல் நடந்த தேர்தலில், பா.ஜ., 72ல் போட்டியிட்டு, 37ல் வென்றது. கூட்டணி கட்சிகளான, ஏ.ஜே.எஸ்.யு., எனப்படும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், எட்டில் போட்டியிட்டு, ஐந்தில் வென்றது.

அதே நேரத்தில், மத்திய அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி, ஒரு இடத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக, முதல்கட்டமாக, 52 பேர் வேட்பாளர் பட்டியலை, பா.ஜ., சமீபத்தில் வெளியிட்டது. கூட்டணி கட்சிகளுடன் விவாதித்து, மற்ற இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ராம்விலாஸ் பஸ்வானின் மகன், சிராக் பஸ்வான், லோக் ஜனசக்தியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய தலைமையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், '50 தொகுதி களில் தனித்து போட்டியிடுவது' என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை, சிராக் பஸ்வான் அறிவித்தார். இந்தத் தேர்தலில், ஆறு இடங்களில் போட்டியிட லோக் ஜனசக்தி வாய்ப்பு கேட்டு வந்தது. ஆனால், ஒரு தொகுதியை மட்டுமே தருவதாக, பா.ஜ., கூறியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு கூட்டணிக் கட்சியான, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், மாநில பா.ஜ., தலைவர் லக்ஷ்மண் கிலுவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரதர்புர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்து உள்ளது. இந்தக் கட்சி ஏற்கனவே, 12 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில், தங்களுக்கு, '19 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்' என, அந்தக் கட்சி வலியுறுத்தி வந்தது. ஆனால், 'ஒன்பது தொகுதிகள் மட்டுமே தரப்படும்' என, பா.ஜ., தரப்பில் கூறப்பட்டு வந்தது. தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகள் முரண்டு பிடிக்கும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்திலும், பா.ஜ., கூட்டணியில் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பா.ஜ.,வுக்கு ரூ.356 கோடி:

கடந்த, 2018 -19ம் நிதியாண்டில் கிடைத்த நன்கொடைகள் குறித்த விபரங்களை, தேர்தல் கமிஷனில் கட்சிகள் சமர்ப்பித்துள்ளன. பா.ஜ., அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2018 - 19ம் நிதியாண்டில், காசோலைகள் மற்றும் ஆன்லைன் மூலமாக, 700 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. அதில், டாடா குழுமத்தின் அறக்கட்டளை மட்டும், 356 கோடி ரூபாயை அளித்துள்ளது. நாட்டின் பணக்கார அறக்கட்டளையான, புரூடன்ட் தேர்தல் அறக்கட்டளை, 54.25 கோடி ரூபாயை அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை