ஷாய் ஹோப் அதிரடி சதம் ஆப்கானை ஒயிட்வாஷ் செய்தது வெ.இண்டீஸ்

தினகரன்  தினகரன்
ஷாய் ஹோப் அதிரடி சதம் ஆப்கானை ஒயிட்வாஷ் செய்தது வெ.இண்டீஸ்

லக்னோ: ஆப்கானிஸ்தான் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 2-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச, ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன் குவித்தது. ஹஸ்ரதுல்லா 50, அஸ்கர் ஆப்கன் 86, நஜிபுல்லா ஸத்ரன் 30, முகமது நபி 50 ரன் விளாசினர்.அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்து ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தியது. லூயிஸ் 1, ஹெட்மயர் 0, கிங் 39, பூரன் 21, கேப்டன் போலார்டு 32 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அபாரமாக விளையாடிய தொடக்க வீரர் ஷாய் ஹோப் சதம் அடித்தார். ஹோப் 109 ரன் (145 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), சேஸ் 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அந்த அணியின் ஹோப் ஆட்ட நாயகன் விருதும், ரோஸ்டன் சேஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி லக்னோவில் நாளை இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

மூலக்கதை