இன்னொரு ஊழியர் புகார் இன்போசிஸ் நிறுவனத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை

தினகரன்  தினகரன்
இன்னொரு ஊழியர் புகார் இன்போசிஸ் நிறுவனத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை

பெங்களூரூ: பிரபல சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சலீல் பார்க்கே மீது அந்த நிறுவனத்தின் நிதித்துறையைச் சேர்ந்த மற்றொரு ஊழியர்  புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதற்கு முன்பு கடந்த மாதம் இதேபோன்ற குற்றச்சாட்டை ஓர் ஊழியர் சுமத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் பெரும் சரிவை சந்தித்தது.இந்த ஊழியர் தனது கையெழுத்து இல்லாத மற்றும் தேதி குறிப்பிடாத புகார் கடிதத்தை நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலகேனி மற்றும் நிர்வாகக் குழுவின் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ளார்.கடிதத்தில் ஊழியர் கூறியதாவது: இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த ஓர் ஆண்டு 8 மாதங்களுக்கு முன்பு பார்க்கே பொறுப்பு ஏற்றார். சிஇஓ பெங்களூரூவில் இருந்து பணியாற்ற வேண்டும். ஆனால், இவர் மும்பையில் இருந்து பணியாற்றுகிறார். இதுவே நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு மாறானது மட்டுமல்ல, நிறுவன செல்வாக்கு சரியவும் காரணம்.  “நான் யார் என்று என்னை அடையாளப்படுத்தினால் என் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்பதாலும், நிறுவனத்தின் நலன் கருதியும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக” அந்த ஊழியர் தனது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.நிறுவனத்தின் செயல்பாடுகளை முற்றிலும் சீர்குலைக்கும் வகையில் பார்க்கே செயல்படுகிறார். நிறுவனத்தின் நலன் கருதியும் இந்த குற்றச்சாட்டை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவிற்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமை.மாதத்திற்கு இரண்டு முறை மும்பையில் இருந்து பெங்களூரூக்கு பார்க்கே வருகிறார். அதற்காக விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் மற்றும் ஓட்டல் செலவு என்று ரூ.22 லட்சம் வரையில் செலவு செய்யப்படுகிறது.இவ்வாறு ஊழியர் அந்த கடித்ததில் கூறியுள்ளார். இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் 20ம் தேதியிட்ட 2 பக்க புகார் கடிதத்தை ஓர் ஊழியர் அனுப்பியிருந்தார்். அப்போது பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் மற்றொரு ஊழியர் புகார் கடிதம் அனுப்பியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.முன்னதாக, இன்போசிஸ் நிறுவன சிஇஓ மற்றும் சிஎப்ஓவிற்கு எதிராக அளிக்கப்பட்டு இருக்கும் புகார்கள் குறித்து முறையாக விசாரிக்கப்படும் என்று இன்போசிஸ் தலைவர்  நந்தன் நிலகேனி தெரிவித்து இருந்தார். இன்போசிஸ் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அவ்வப்போது வெளியாகும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

மூலக்கதை