நடிகர் ஹ்ருத்திக்கை ரசிப்பதா? மனைவியை கொன்று கணவர் தற்கொலை

தினமலர்  தினமலர்
நடிகர் ஹ்ருத்திக்கை ரசிப்பதா? மனைவியை கொன்று கணவர் தற்கொலை

நியூயார்க் : பாலிவுட் நடிகர் ஹ்ருத்திக் ரோஷனை மிகவும் விரும்பிய தன் மனைவியை, அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர், கத்தியால் குத்தி கொலை செய்ததுடன், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அருகேயுள்ள குயின்ஸ் என்ற பகுதியில் வசித்தவர், தினேஷ்வர் புதிதாத், 33. அமெரிக்க வாழ் இந்தியரான இவருக்கும், டோனி டிஜோய், 27, என்ற பெண்ணுக்கும், ஜூலையில் திருமணம் நடந்தது. வெறித்தன ரசிகைடோனி, நியூயார்க்கில் உள்ள மதுபான விடுதியில் பணியாற்றி வந்தார். பாலிவுட் நடிகர் ஹ்ருத்திக் ரோஷனின் வெறித்தனமான ரசிகை, இவர். 'டிவி'யில் எப்போதும் ஹ்ருத்திக் நடித்த படங்கள், பாடல்களை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இது, அவரது கணவர் தினேஷ்வருக்கு பிடிக்கவில்லை. பலமுறை கூறியும், ஹ்ருத்திக் நடித்த படங்களின் பாடல்களை பாடி காட்டுவது, அவர் போல் நடிப்பது என, டோனி, தன் கணவரை வெறுப்பேற்றி வந்தார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கடும் கோபமடைந்த தினேஷ்வர், மனைவியை அடித்து, உதைத்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், டோனி. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டோனியை அடிக்க தடை விதித்தது.

தகராறு


இந்நிலையில், சமீபத்தில் வீட்டில் இருந்தபோது, வழக்கம் போல் இருவருக்கும், ஹ்ருத்திக் ரோஷன் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.ஹ்ருத்திக் ரோஷனை, டோனி புகழ்ந்து பேசினார். கடும் கோபமடைந்த தினேஷ்வர், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின், மனைவியின் சகோதரிக்கு, மொபைல் போனில் ஒரு தகவல் அனுப்பினார். அதில், டோனியை கொலை செய்து விட்டதாகவும், சாவியை, வீட்டில் உள்ள பூந்தொட்டிக்கு கீழே வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பின், மனைவியின் உடலுக்கு அருகிலேயே, துாக்கு மாட்டி தற்கொலை செய்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, இரு உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, அமெரிக்க பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு உள்ளன.

மூலக்கதை