குருநானக் தேவ் கனவுகளை நிறைவேற்ற சமுதாயத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம்: பிரதமர் மோடி டுவிட்

தினகரன்  தினகரன்
குருநானக் தேவ் கனவுகளை நிறைவேற்ற சமுதாயத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம்: பிரதமர் மோடி டுவிட்

புதுடெல்லி: குருநானக் தேவின் கனவுகளை நிறைவேற்ற சமுதாயத்திற்கு நம்மை நாம் அற்பணிக்க வேண்டும் என்று மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தில் ராவி  நதிக்கரையோரத்தில் ஸ்ரீ நான்கானா சாஹிப் என்ற இடத்தில் 550 ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் பிறந்ததாக நம்பப்படுகிறது.அவர் உயிர்நீத்த இடம் அதே மாகாணத்துக்குட்பட்ட கர்தார்பூரில் சமாதியாக  பாதுகாக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் குருநானக் தேவின் 550வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் இந்திய பக்தர்களின் வசதிக்காக இந்தியா-பாகிஸ்தான் அரசுகளால் கர்தார்பூர் பாதை அமைக்கப்பட்டது. அந்த பாதையை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி  திறந்து வைத்து, சீக்கிய யாத்ரீகர்களை வழியனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல், அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, குருநானக் தேவ் சீக்கியர்களுக்கு மட்டுமான சொத்து அல்ல. ஒட்டுமொத்த  மனிதகுலத்துக்குமான ஊக்கசக்தியாக விளங்கினார். குருநானக் தேவ் ஒரு குருவாக மட்டுமல்லாமல் நமது சிந்தனையாகவும் வாழ்க்கையின் அடித்தளமாகவும் திகழ்ந்தார் என்று புகழ்ந்து பேசினார்.மேலும், கர்தார்பூர் பாதை அமைக்க உறுதுணையாக இருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்தநிலையில் குருநானக் தேவின் 550வது பிறந்தநாளான இன்று, மோடி குருநானக் தேவின் இந்த 550வது  பிறந்தநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாளில் குருநானக் தேவின் கனவை நிறைவேற்றுவதற்காக நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும் என்று டிவிட்டரில் கூறியுள்ளார். மேலும் இந்த டிவிட்டரில்  கடந்த 9ம் தேதி பாதை திறப்பின் போது பேசிய வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை