2,012 பேர்! 'வாட்ஸ் ஆப்' எண்ணில் விண்ணப்பம்:அடிப்படை வசதிகளுக்கு குவியும் புகார்

தினமலர்  தினமலர்
2,012 பேர்! வாட்ஸ் ஆப் எண்ணில் விண்ணப்பம்:அடிப்படை வசதிகளுக்கு குவியும் புகார்

திருப்பூர்:மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்த, 'வாட்ஸ் ஆப்' எண்ணில், 2,012 பேர், தங்களது கோரிக்கையை விண்ணப்பித்துள்ளனர்.கடந்த மாதம், மாவட்டத்தின் குறைகேட்பு பயன்பாட்டுக்காக, 97000 41114 என்ற 'வாட்ஸ் ஆப்' எண் அறிமுகம் செய்யப்பட்டது. தாலுகா வாரியாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கோரிக்கை, புகார் அனைத்தையும், 'வாட்ஸ் ஆப்' எண் மூலமாக தெரிவிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
மாவட்ட சமூக பாதுகாப்பு பிரிவில், தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டு, 'வாட்ஸ் ஆப்' புகார்களும், கோரிக்கைகளும், உரிய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுத்த பிறகு, சம்பந்தப்பட்ட நபருக்கும் பதிலாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஒரு மாதத்தில், 2,012 புகார்கள், 'வாட்ஸ் ஆப்' மூலமாக பெறப்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளுக்கும், உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறியதாவது:மாவட்ட நிர்வாகத்தின் 'வாட்ஸ் ஆப்' எண்ணில், கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் வரப்பெறுகிறது. பதிவேட்டில், அதன் விவரம் பதிவு செய்யப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, அடிப்படை வசதி தொடர்பான கோரிக்கை, நிறைவேற்றப்படுகிறது.
அதிகபட்சமாக, வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் போன்ற விண்ணப்பங்கள் வருகின்றன. வாராவாரம், 'வாட்ஸ் ஆப்' கோரிக்கை மீதான நடவடிக்கை ஆய்வு செய்யப்படுகிறது. தள்ளுபடியான விண்ணப்பங்கள் குறித்து, விண்ணப்பதாரரிடமும், 'போன்' மூலமாக விசாரணை செய்யப்படுகிறது.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

மூலக்கதை