பழுது! அரசின் இ- சேவை மையங்களில் பிரின்டர் இயந்திரம்...சான்றிதழ் பெற விண்ணப்பிக்க முடியாமல் மக்கள் தவிப்பு

தினமலர்  தினமலர்
பழுது! அரசின் இ சேவை மையங்களில் பிரின்டர் இயந்திரம்...சான்றிதழ் பெற விண்ணப்பிக்க முடியாமல் மக்கள் தவிப்பு

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் அரசின் பெரும்பாலான இ-சேவை மையங்களில், பிரின்டர் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், சான்றிதழ் பெற விண்ணப்பிக்க முடியாமல், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில், இ-சேவை மையங்கள் வாயிலாக வருவாய்த் துறை, சமூக நலத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, மின்சார வாரியம், தேர்தல் ஆணையம், கல்வித் துறை என, பல்வேறு துறைகள் சார்பில், 47 வகையான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களிலும், கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட நகராட்சி அலுவலகங்களிலும் அரசின் இ-சேவை மையங்கள் உள்ளன. இந்நிலையில், கடலுார் கலெக்டர் அலுவலகம், மஞ்சக்குப்பம், நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகம், பண்ருட்டி, விருத்தாசலம் நகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்கள் உட்பட பல்வேறு இடங்களில் பல மாதங்களாக பிரின்டர் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால், பொதுமக்கள் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், நேரம் விரயமாகி வீண் அலைச்சல் ஏற்படுவதுடன், அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது.
சிலர் வேறு வழியின்றி, அங்கேயே விண்ணப்பித்து விட்டு, ஒப்புகை சீட்டின் நம்பரை குறித்துக் கொண்டு, தனியார் இ-சேவை மையங்களில் காண்பித்து, சான்றிதழ் பெறுகின்றனர். இதற்காக, அரசின் இ-சேவை மையங்களில் செலுத்தப்படும் கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.எனவே, அரசின் இ- சேவை மையங்களில் பழுதடைந்துள்ள பிரின்டர் இயந்திரங்களை சரி செய்ய, தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இ- சேவை மைய ஊழியர்கள் கூறுகையில், 'மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பிரின்டர் பழுதாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனை மக்கள் புரிந்து கொள்ளாமல் தகராறு செய்கின்றனர்.குறைந்த ஊதியம் பெறும் நாங்கள், கணினி, பிரின்டர் இயந்திரம், மின் விளக்குகள் அடிக்கடி பழுதடையும் போது, வேறு வழியின்றி சொந்த செலவிலேயே சரி செய்து, பணிபுரிய வேண்டிய நிலைக்கு ள்ளப்பட்டுள்ளோம்' என்றனர்.

மூலக்கதை