அறிவித்தது தி.மு.க..துவக்கியது அ.தி.மு.க..முடிப்பது யாரோ?

தினமலர்  தினமலர்
அறிவித்தது தி.மு.க..துவக்கியது அ.தி.மு.க..முடிப்பது யாரோ?

ஊட்டி : நீலகிரியில் தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டு, 11 ஆண்டை கடந்தும், குந்தா நீரேற்று மின் திட்ட பணி 'ஆமை' வேகத்தில் நடப்பது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரியில், குந்தா ஆற்றின் குறுக்கே, அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளுக்கு மத்தியில், காட்டுக்குப்பை என்ற இடத்தில், குந்தா மின் வட்டத்துக்கு உட்பட்ட, 7வது மின் நிலையமான, குந்தா நீரேற்று மின் நிலையம் அமைக்கும் திட்டம் துவக்கப்பட்டது. நான்கு பிரிவுகளில், தலா, 125 மெகாவாட் என, மொத்தம், 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம், 2008 ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, பின், பல்வேறு காரணங்களால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2011ம் ஆண்டு அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2013ல் கிடப்பில் போடப்பட்ட இத்திட்டம் துவக்கப்பட்டது.

தற்போது, 1,831 கோடி ரூபாயில் இத்திட்டம் நடந்து வரும் நிலையில், இடையில் டெண்டர் பணி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரண்டு ஆண்டுகள் இத்திட்டம் காலதாமதமானது. மீண்டும் பணி துவக்கப்பட்டு நடந்து வருகிறது. இதில், 500 மீட்டர் நீளத்துக்கு, 'டிராலியில்' பொருட்களை எடுத்து செல்லும் செங்குத்தான சுரங்கப்பாதை அமைக்கும் பணி; 1,300 மீட்டர் நீளத்திற்கு பிரதான சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றன. இன்னும், 500 மீட்டர் நீளத்துக்கு சுரங்க வழிப்பாதை அமைக்க நடந்து வருகிறது.

இதன் திட்ட அறிவிப்பு படி, முதல் பிரிவு, 125 மெகாவாட் உற்பத்திக்கான பணி, 2017ம் ஆண்டு டிச., மாதம் நிறைவு பெற வேண்டும். அதற்கான காலக்கெடு முடிந்தும் கூட இன்னும் முதல் பிரிவுக்கான பணி முடியாததால், மீதமுள்ள, மூன்று பிரிவில், 375 மெகாவாட் திட்ட பணிகள் மிகவும் தாமதமாகும் சூழல் நிலவி வருகிறது. அறிவித்து, 11 ஆண்டை கடந்து செல்லும் இப்பணி ஆமை வேகத்தில் நடப்பதால், பெரும் அதிருப்தி நிலவுகிறது. திட்ட மேற்பார்வை பொறியாளர் திருமால் கூறுகையில்,' மொத்தம், 2,300 மீட்டர் நீளத்துக்கான சுரங்க பணியில், 1,800 மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிந்து விட்டன. அடுத்த கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது,'' என்றார்.

மூலக்கதை