கொசு கடித்தால் மட்டுமல்ல... உடலுறவு மூலமும் டெங்கு பரவும்: ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்

தினகரன்  தினகரன்
கொசு கடித்தால் மட்டுமல்ல... உடலுறவு மூலமும் டெங்கு பரவும்: ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்

மாட்ரிட்: டெங்கு காய்ச்சலானது கொசுக்கள் மூலமாக மட்டுமல்ல, டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாலியல் ரீதியிலான உறவு கொண்டாலும் பரவும் என்பது ஸ்பெயினில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. டெங்கு வைரசானது கொசுக்கள் மூலமாக மனிதனுக்கு பரவுகின்றது. ஏடிஸ் என்ற கொசுக்கள் கடிப்பதால் டெங்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த காய்ச்சல் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைகின்றனர்.  இந்நிலையில் டெங்கு பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாலியல் ரீதியிலான உறவு வைத்துக்கொள்வதாலும் டெங்கு காய்ச்சல் பரவும் என்பதை ஸ்பெயின் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர், கடந்த செப்டம்பரில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  விசாரணையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த தனது ஆண் துணையுடன் அவர் பாலியல் ரீதியிலான உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரது ஆண் துணை கியூபா மற்றும் டொமினிக் குடியரசு உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று  திரும்பி இருந்தார். மருத்துவர்கள் அவரது விந்தணுவை சோதனை செய்தனர். அதில் அவருக்கு டெங்கு இருந்தது மட்டுமல்ல, கியூபாவில் பரவும் அதே வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் உடலுறவால் டெங்கு பரவும் என்பது உறுதியாகி உள்ளது.

மூலக்கதை