பொதுக்குழு கூட்டம் முடிந்தநிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: ஸ்டாலின் தலைமையில் நடந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொதுக்குழு கூட்டம் முடிந்தநிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: ஸ்டாலின் தலைமையில் நடந்தது

சென்னை: பொதுக் குழு கூட்டம் நேற்று முடிந்தநிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலையில் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மு. க. ஸ்டாலின் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

அதாவது, அடிப்படை பண்புகளுக்கு ஊரு நேராமல் அரசியல் சட்டத்தை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று தந்த மு. க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு மணிமகுடம் சூட்டிய திமுக தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, ஊழலின் ஊற்று கண்ணாக திகழும் அதிமுக ஆட்சிக்கு கண்டனம் தெரிவிப்பது, 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது, தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்புகளில் 90 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமிக்க வேண்டும்.



உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்துவது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10. 40 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமை வகித்தார்.

இதில் திமுக முதன்மை செயலாளர் டி. ஆர். பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி. பி. துரைசாமி, அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, செய்தி தொடர்பாளர் டி. கே. எஸ். இளங்கோவன் எம்பி மற்றும் சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் அன்பழகன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழுவில், கட்சியினர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக மாவட்ட செயலாளர்களிடம் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். தொண்டர்கள் தான் கட்சியின் உயிர் மூச்சு அவர்களை மதித்து செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

வர உள்ள உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, வெற்றி வியூகங்கள் குறித்தும், யார் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக  கூறப்படுகிறது.

.

மூலக்கதை