வியாபாரத்தில் நஷ்டம்: மனைவி, மகனுடன் வியாபாரி தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வியாபாரத்தில் நஷ்டம்: மனைவி, மகனுடன் வியாபாரி தற்கொலை

விருதுநகர்: வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விருதுநகரில் மனைவி, மகனுடன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் ஆர். எஸ். நகரை சேர்ந்தவர் இன்பமூர்த்தி(69). மல்லி வியாபாரி.

இவருக்கு சொந்தமான மல்லி கிட்டங்கி விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் பெரியவள்ளிக்குளத்தில் உள்ளது. குஜராத்தில் இருந்து மல்லி கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வந்தார்.

மல்லி வாங்கியதற்காக குஜராத் வியாபாரிக்கு இன்பமூர்த்தி ரூ. 40 லட்சம் வரை பணம் கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே பணத்தை கொடுக்க முடியாமல் பரிதவித்து வந்துள்ளார்.
பணத்தை பலமுறை கேட்டும் இன்பமூர்த்தி தராததால், குஜராத் வியாபாரி அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கோர்ட்டில் ஆஜராக கோரி குஜராத் கோர்ட்டிலிருந்து விருதுநகர் எஸ். பி அலுவலகம் மூலம் இன்பமூர்த்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த வாரம் விசாரணைக்காக அவர், குஜராத் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை இன்பமூர்த்தி, மனைவி திலகவதி(60), மகன் கண்ணன்(40) ஆகியோர் கிட்டங்கிக்கு சென்றனர்.

அங்கு டீ மற்றும் குளிர்பானத்தில் விஷம் கலந்து மூவரும் குடித்துள்ளனர். இதில் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி இன்பமூர்த்தி, கண்ணன் உயிரிழந்தனர்.

திலகவதி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இன்று காலை கிட்டங்கிக்கு வேலைக்கு சென்றவர்கள் தந்தை, மகன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சூலக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இன்பமூர்த்தி, கண்ணனின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த திலகவதி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொழில் நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை