திருமணத்திற்கு 4 மணி ேநரம் முன்பாக இன்ஜினியர் மணமகன் தூக்கிட்டு தற்கொலை: ஐதராபாத்தில் உறவினர்கள் சோகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருமணத்திற்கு 4 மணி ேநரம் முன்பாக இன்ஜினியர் மணமகன் தூக்கிட்டு தற்கொலை: ஐதராபாத்தில் உறவினர்கள் சோகம்

ஐதராபாத்: திருமணம் நடப்பதற்கு 4 மணி நேரத்திற்குமுன், சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மலக்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் (24).

சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரது உறவினர் பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது.

நேற்று காலை 11 மணிக்குத் திருமணம் நடக்க இருந்தது. ஐதராபாத் புறநகர் பகுதியான கொம்பள்ளியில் உள்ள திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.



கடந்த சனிக்கிழமை இரவு வரை ஜாலியாக இருந்த சந்தீப், நேற்று அதிகாலை 3 மணிக்கு மணமகன் அறைக்குத் தூங்கச் சென்றார். காலை 7 மணிக்கு, அவர் துங்கிக்கொண்டிருந்த அறையின் கதவைத் தட்டிய போது, அவர் கதவை திறக்கவில்லை.

இரவு அதிக நேரம் விழித்து இருந்ததால், தூங்கிக்கொண்டிருப்பதாக உறவினர்கள் நினைத்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் கதவைத் தட்டினர்.

ஆனால், அவர் திறக்கவில்லை.
எவ்வித சத்தமும் வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது சந்தீப், ஃபேனில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டு இறந்திருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் சந்தீப் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக சந்தீப் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை.

போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இன்ஜினியர் சந்தீப்பின் தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.

தந்தை சொந்த தொழில் செய்து வருவதால், தனது தாத்தாவின் வீட்டில் சந்தீப் வளர்ந்து வந்தார். இவரது பாசமுள்ள தாத்தாவும் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார்.

அந்தப் பிரிவை தாங்காமல் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

திருமணம் நடக்க இருந்த சில மணி நேரத்திற்கு முன்பு, மணமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை