மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் அடுத்த திருப்பம்: பாஜ-சிவசேனா கூட்டணி முறிவு: மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் திடீர் ராஜினாமா

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் அடுத்த திருப்பம்: பாஜசிவசேனா கூட்டணி முறிவு: மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் திடீர் ராஜினாமா

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் அடுத்த திருப்பமாக சிவசேனாவை சேர்ந்த மத்திய அமைச்சர் திடீரென ராஜினாமா செய்ததால், பாஜ - சிவசேனா இடையிலான கூட்டணி முறிவு உறுதியாகி உள்ளது. சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததால், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜ (105) - சிவசேனா (56) கூட்டணி 161 தொகுதிகளையும், காங்கிரஸ் (44) - தேசியவாத காங்கிரஸ் (54) கூட்டணி 117 தொகுதிகளையும் கைப்பற்றின. ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

பாஜ - சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் இருந்தும், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது, அமைச்சரவையில் 50 சதவீத பங்கு வேண்டும் என சிவசேனா பிடிவாதமாக இருப்பதால், பாஜ - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதில் 16 நாட்களுக்கு மேலாக இழுபறி நீடித்து வருகிறது.

இதனிடையே, அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில், ஆட்சியமைக்க விருப்பமா என்பதை தெரிவிக்குமாறு, நேற்று முன்தினம் பாஜவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் அனுப்பினார்.

ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் இல்லாததால், தயக்கம் காட்டி வந்த பாஜ, ‘பெரும்பான்மை இல்லாததால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை’ என்று நேற்று அறிவித்தது. இந்நிலையில், 56 இடங்களைக் கைப்பற்றிய 2வது தனிப்பெரும் கட்சியான சிவசேனாவுக்கு மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க விருப்பமா? எனக் கேட்டு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து, சிவசேனா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏக்நாத் ஷிண்டேவுக்கு, ஆட்சி அமைப்பது தொடர்பான அழைப்பை ஆளுநர் மாளிகை அனுப்பியுள்ளது. அதில், ‘நாளை (இன்று) இரவு 7 மணிக்குள் ஆட்சி அமைப்பது தொடர்பான விபரத்தை அளிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.



பரபரப்பான இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் மத்திய கனரகத் தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த், தான் அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென பதிவிட்டுள்ளார். இதன்காரணமாக, மத்திய ஆட்சி அதிகாரத்தில் பாஜ - சிவசேனா கூட்டணியில் முறிவு ஏற்பட்டது உறுதியாகி உள்ளது.

அதேநேரத்தில், மாநிலத்தில் இன்று ஆட்சியமைப்பது தொடர்பாக முக்கிய முடிவை ஆளுநர் கோரியுள்ளதால், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாகத்தான், பாஜ கூட்டணியில் இருந்து சிவசேனா அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.



அதனை உறுதிப்படுத்தும் வகையில், ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ‘பாஜ கூட்டணியில் இருந்து விலகினால்தான் புதிய கூட்டணிக்கான வாய்ப்பு’ என்று தங்களது நிலைப்பாட்டை சிவசேனாவிடம் தெரிவித்துவிட்டன. இந்த நிலையில், சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்திலும், காங்கிரஸ் வெளியில் இருந்து கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே சிவசேனாவுக்கு ஆளுநர் விடுத்த அழைப்பு காரணமாக, அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவைப்பொறுத்துதான் மகாராஷ்டிராவில் யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்பதை தீர்மானிக்க முடியும்.

விடாது துரத்தும் புத்திர பாசம்

மகாராஷ்டிரா பாஜ மூத்த தலைவர் அபிஷேக் திரிபாதி கூறியதாவது: உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாகி உள்ளார். அவருக்கு முதல்வர் பதவியைப் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்பதற்காக மொத்த மகாராஷ்டிரா மக்களையும் பிணைக்கைதிகளாக உத்தவ் தாக்கரே பிடித்து வைத்துள்ளார்.

சிவசேனா சார்பில் ஒருவர் முதல்வராக வேண்டும் என்றால், அந்த கட்சியில் வேறு சீனியர் தலைவர்கள் இருக்கிறார்களே? அவர்களை எல்லாம் ஏன் விட்டுவிட்டார். இதற்கெல்லாம் காரணம், தன் மகன் மீதான பாசம் தான்.

மொத்த அரசியல் குழப்பத்திற்கும் இதுதான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.



ஆளுநரின் அடுத்த முடிவு என்ன?

1. பாஜவுக்கு அடுத்தபடியாக யார் அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்ற அடிப்படையில் சிவசேனாவுக்கு ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

அதன்படி சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடிந்தால் ஆட்சியமைக்க பலம் கிடைக்கும். அதற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் தேவை.

இவ்வாறாக நடந்தால், சிவசேனா தலைமையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையும்.

2.

மற்றொரு வாய்ப்பை ஆளுநரால் ஏற்படுத்த முடியும். அதாவது, சட்டபேரவையை கூட்டி அங்கேயே யார் முதல்வர் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

அவ்வாறு சட்டப்பேரவையிலேயே ஒருவரை முதல்வராக பெரும்பான்மை எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுத்துவிட்டால், பெரும்பான்மை பலத்தை மறுபடியும் நிரூபிக்க தேவை இருக்காது. தலை எண்ணிக்கை அல்லது வாக்குபதிவு பெட்டியை வைத்து ஓட்டு சீட்டு முறையில் முதல்வரை தேர்ந்தெடுக்க முடியும்.

உத்தரபிரதேசத்தில் கடந்த 1998ல், கல்யாண்சிங் இப்படித்தான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

3.

இன்று சிவசேனாவும் பின்வாங்கினால், ஆளுநரின் வேலை எளிதாக முடிந்துவிடும். எந்த கட்சியும் ஆட்சியமைக்க வரவில்லை என்பதால், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வதாக ஆளுநர் அறிவிக்க முடியும்.

இவ்வாறு தெரிவித்தால், குடியரசு தலைவர் ஆட்சி காலம் முடிவடைந்ததும், மீண்டும் புதிதாக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும். இதனிடையே, காங்கிரஸ் கட்சி தங்களை ஆட்சியமைக்க அழைப்புவிடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

ஆனால், தேசியவாத காங்கிரஸ், தாங்கள் எதிர்கட்சி வரிசையில் அமர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை