சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ. பி. சாஹி இன்று காலை பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. இதை மறு பரிசீலனை செய்யக்கோரிய  தஹில் ரமானியின் கோரிக்கையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்தது.

இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைதொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டு, செயல்பட்டு வந்தார்.

 

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பாட்னா உயர்  நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹி என்ற ஏ. பி. சாஹியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஏ. பி. சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து அக்டோபர் 30ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஏ. பி. சாஹி, இன்று காலை 9. 30 மணி அளவில் பதவி ஏற்றார். இந்த பதவி ஏற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்ந நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபால், உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், தமிழக அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து அவர் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.

புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஏ. பி. சாஹி, 1959ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். 1985ல் சட்டப்படிப்பை முடித்த இவர் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியை தொடங்கினார்.

சிவில் மற்றும் அரசியல் சாசன வழக்குகளில் ஆஜராகி வந்த அவர் 2004ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து 2005ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2018 நவம்பர் மாதம் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை