வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டி20: சச்சின் சாதனையை முறியடித்த ஷஃபாலி: 49 பந்தில் 73 ரன்கள் விளாசல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டி20: சச்சின் சாதனையை முறியடித்த ஷஃபாலி: 49 பந்தில் 73 ரன்கள் விளாசல்

லூசியா: வெஸ்ட்இண்டீஸ் - இந்திய மகளிர் அணிகளுக்கு  இடையில் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் லூசியாவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை குவித்தது.

தொடர்ந்து, 186 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களையே எடுத்தது. அந்த அணியில் ஷொமைன் கேம்பல் அதிகபட்சமாக 33 ரன்களை எடுத்தார்.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர்.

இந்திய தரப்பில் ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த இந்தியர் என்ற புதிய சாதனையை ஷஃபாலி வர்மா (15) நிகழ்த்தினார். தற்போதைய டி20 ஆட்டத்தில் 49 பந்தில் 73 ரன்களை விளாசி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுக்கால சாதனையை ஷஃபாலி முறியடித்தார்.

சச்சின் டெண்டுல்கர் முதல் டெஸ்ட் அரைசதத்தை 16 ஆண்டுகள், 214 நாள்களில் அடித்தார். தனது 5வது டி20 ஆட்டத்தில் ஆடிய ஷஃபாலி 15 ஆண்டுகள், 285 நாள்களில் முதல் சர்வதேச அரைசதத்தை பதிவு செய்தார்.

இதன் மூலம் 30 ஆண்டுக்கால சச்சின் சாதனையை ஷஃபாலி முறியடித்துவிட்டார்.

இவரது சாதனையை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

.

மூலக்கதை