முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

சென்னை: தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி. என். சேஷன் நேற்று உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அவருக்கு வயது 87. இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
தமிழகத்தை சேர்ந்த டி. என்.

சேஷன் ஐஏஎஸ் முடித்து மத்திய அரசில் பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர். இந்தியாவின் 10வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக 1990ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் 1996ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதிவரை பொறுப்பு வகித்தார்.

ஆணையராக இருந்த காலகட்டத்தில் தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்துவது மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

இதற்காக அவரை பல அரசியல் கட்சிகள் விமர்சித்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தன் தேர்தல் சீர்திருத்தப்பணியில் தீவிரமாக இருந்தார். தேர்தல் ஆணைய நடவடிக்கையை வெளிப்படையாக்கினார்.

சென்னை தாம்பரம் கிருத்தவக் கல்லூரியில் பி. எஸ். சி. (ஹானர்ஸ்) அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம். பி. ஏ. (பொது நிர்வாகம்), ஐ. பி. எஸ் (1953),ஐ. ஏ. எஸ். (1954) முடித்தார்.

இவருக்கு உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று சேஷன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மோடி, எடப்பாடி, ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி. என். சேஷன் மறைவுக்கு, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி. என். சேஷன் நேற்றிரவு உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, பிரதமர் ேமாடி வெளியிட்ட இரங்கல் ட்விட்டில், ‘டி. என். சேஷன் சிறந்த அரசு ஊழியர். விடாமுயற்சி மற்றும் நேர்மையுடன் அவர் இந்தியாவுக்காக பணியாற்றினார்.

தேர்தல் சீர்த்திருத்தங்கள் நோக்கிய அவரது முயற்சிகள் நமது ஜனநாயகத்தை வலுவானதாகவும், அதிக பங்களிப்புடனும் ஆக்கியுள்ளன. அவரது மறைவு வேதனை கொடுத்தது.

ஓம் சாந்தி’ என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘டி. என். சேஷனது தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை வழிகாட்டும் விளக்காக திகழும்’ என்றும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘ஜனநாயகத்துக்காக டி. என். சேஷன் ஆற்றிய பணிகள் எப்போதும் நினைவு கொள்ளப்படும்’ என்றும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி, ‘டி. என். சேஷன் சிறிது நேரத்திற்கு முன்பு காலமானார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறேன். அவரது ஆத்மாவுக்கு அமைதி கிடைக்க பிரார்த்திக்கிறேன்’ என்றும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர்:  முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான டி. என். சேஷன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். அவர், தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலகட்டத்தில், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

அவரை இழந்து வாடும்  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.     

மு. க. ஸ்டாலின்: இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி. என். சேஷன் திடீரென மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டுப் பெரிதும் வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   ‘சுதந்திரமான, நேர்மையான’ தேர்தலை நடத்தி, ஜனநாயகத்தின் உறுதிமிக்க பாதுகாவலனாக சேஷன் திகழ்ந்தார்.

பாரபட்சமற்ற முறையில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆளுங்கட்சியோ - எதிர்க்கட்சிகளோ, யாருடைய தலையீட்டையும் முற்றிலுமாகத் தவிர்த்து, அனைவருக்கும் தேர்தலில் சம களத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அவர், வாக்காளர்களின் நினைவில் மட்டும் நிற்கவில்லை.

இந்திய ஜனநாயகத்தின் இரு கண்களிலும் என்றைக்கும் ஒளி வீசிக் கொண்டிருப்பார் என்பது திண்ணம்.

நேர்மை, கண்டிப்பு, நடுநிலை ஆகியவற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் என்றால், அது மிகையல்ல. இந்தியத் தேர்தல் வரலாற்றில், டி. என். சேஷனால் தலைமைத் தேர்தல் ஆணையம், சிறப்பான நம்பகத் தன்மையினை வளர்த்துப் புகழ் பெற்றது.

அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றது. அவர் இன்றைக்கு நம்மிடையே இல்லை.

இது நாட்டிற்கு மட்டுமல்ல, ஜனநாயகத்தை விரும்பும் அரசியல் கட்சிகள் அனைவருக்கும் பேரிழப்பாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை