மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு இன்று கூடியது: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு இன்று கூடியது: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: மு. க. ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு இன்று காலை கூடியது. இந்த கூட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் வெற்றி வியூகம் வகுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வருடத்துக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது விதியாகும்.

அந்த அடிப்படையில் திமுக பொதுக்குழு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி கூடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அறிவித்திருந்தார். ஆனால், அந்த சமயத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதனால் திமுக பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு நவம்பர் 10ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்தது.



அதன்படி இன்று காலை 9. 50 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய். எம். சி. ஏ. திடலில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமை வகித்தார்.

பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். பொதுக்குழுவில் திமுக முதன்மை செயலாளர் டி. ஆர். பாலு, துணை பொதுச்செயலாளர்கள் வி. பி. துரைசாமி, ஐ. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர். எஸ். பாரதி, டிகேஎஸ்.

இளங்கோவன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், எம்,பிக்கள் கனிமொழி, ஆ. ராசா, சென்னை மாவட்ட செயலாளர்கள் ஜெ. அன்பழகன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் தொடங்கியதும் அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு மு. க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வரவிருக்கும் தேர்தல்களில் இது போன்ற பின்னடைவை சந்திப்பதை தவிர்க்க கட்சியினர் முழு வீச்சில் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று இக்கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் வெற்றி வியூகம் வகுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு சீட் வழங்குவது என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் அண்மை காலமாக திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள், கட்சியின் சட்டத்திருத்தம்,  தணிக்கை குழு அறிக்கை உள்ளிட்ட பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.

.

மூலக்கதை