ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமான மாநிலங்கள் கொண்டு வரும் திட்டத்தை கைவிட வேண்டும்: திமுக பொதுக்குழுவில் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமான மாநிலங்கள் கொண்டு வரும் திட்டத்தை கைவிட வேண்டும்: திமுக பொதுக்குழுவில் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை கூடியது. இந்த கூட்டத்தில் தனி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் விவரம் வருமாறு: இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தனது முகப்புரையில் இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயகக் குடியரசாகவே கட்டமைத்துள்ளது. இவற்றோடு, அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட கூறுகளை எப்போதும் திருத்த இயலாது என்று உச்ச நீதிமன்றத்தின் பெரு அமர்வு  திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதை மத்திய அரசு மனதில் கொள்ள வேண்டுமென்று திமுக வலியுறுத்துவதோடு, அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள இவ்வடிப்படை பண்புகளை சிதைத்திட திமுக ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது என்பதை இந்தப் பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது.

நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், மாநிலங்களுக்கிடையே  போக்குவரத்து தொடர்புகள், நாணயச் செலாவணி ஆகியவை குறித்த அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம்  இருக்க வேண்டும்;  ஏனைய அதிகாரங்கள் அனைத்தும்  எஞ்சிய அதிகாரங்களுடன் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்.

மாநிலங்களுக்குத் தரப்பட்டிருக்கிற 18 அதிகாரங்களின் இன்றைய நிலையை திமுக மிகக் கவலையோடு பார்க்கிறது. மேலும் பாஜகவின் வழிகாட்டியாக இருக்கும் ஆர். எஸ். எஸ் அமைப்பின் நோக்கமான மாநிலங்கள், மாவட்டப் பிரிவுகள் அனைத்தையும்  நீக்கி விட்டு இந்தியா முழுவதும் 200 ஜன்பத்கள்  என்று பிரித்து ஒரே நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திட்டத்தை நோக்கி பாஜ அரசு இந்த நேரத்தில் பயணிப்பதாக செய்திகள் வந்துள்ளன.   இந்த முறையைக் கொண்டு வர எத்தனிப்பதற்கு திமுக தனது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இம்முயற்சியை கைவிட வேண்டும்.

மேலும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கையின் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையை  கொண்டுவருவது, அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  எஞ்சிய  அதிகாரங்கள் அனைத்தும்  தற்போது மத்திய  அரசுக்கே உள்ள  நிலையை மாற்றி, மாநில அரசுகள் சட்டங்களை இயற்றிக் கொள்ள வழிவகை செய்வது, நிதி, கல்வி, மான்யம், கடன் வழங்குதல் போன்றவற்றில் மத்திய அரசு கையாண்டு வரும்  “பெரிய அண்ணன்”  மனோபாவம் தவிர்க்கப்பட்டு, மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவது; உள்ளிட்டவற்றை நிறைவேற்றிடும் வகையில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இடஒதுக்கீட்டுக் கொள்கையில்  “பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினர்’’ என்று புதிதாக ஒரு வரையறையை ஏற்படுத்தி,  இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப் போகச் செய்கின்ற செயலை மத்திய அரசு அண்மையில் அரசியல் சட்டத்திருத்த வாயிலாக மேற்கொண்டுள்ளதை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்தத் திருத்தத்தை  திரும்பப் பெற வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர்க்கு வழங்கப்பட வேண்டிய  27 சதவிகித ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர்க்கான 22. 5 சதவிகித ஒதுக்கீடும் மத்திய அரசு முழுமையாகச் செயல்படத்திடவில்லை.   எனவே, சமூகநீதியின் இந்தக் குறைபாடு துடைக்கப்பட வேண்டும் என்றும்;  நிரப்பப்படாத சதவிகிதப் பணி இடங்களை முன்கொணர்ந்து நிரப்பவும்  கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும்; நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள 27 சதவிகித இடஒதுக்கீட்டை  50 சதவிகிதமாக உயர்த்தி நியாயம் வழங்கிட வேண்டும்.

மேலும், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அளித்திடும் வேலைவாய்ப்புகள் இன்றைய நிலையில் வெகுவாகக் குறைந்துவிட்டன.   பொதுத்துறை நிறுவனங்களும் படிப்படியாக  தனியார் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் துறையிலும்  இடஒதுக்கீடு செய்திட வேண்டியது கட்டாயமாகிறது. அதுவே, சமூகநீதியின் சரியான பாதையாக இருக்கும்.   இதுபோன்ற  உறுதியான செயல்திட்டம் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

எனவே, தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகளில்  இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த ஏதுவாக அரசியல் சட்டப்பிரிவுகளில் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து சமூகநீதியைக் காப்பாற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாற அதில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை