குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து: நன்றி தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்

தினகரன்  தினகரன்
குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து: நன்றி தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்

டெல்லி: கடந்த 1984ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து,  பிரதமர்களின் பாதுகாப்புக்காக தனிப் பிரிவு வேண்டுமென சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்பிஜி) உருவாக்கப்பட்டது. இக்குழு பிரதமர்கள் மற்றும் முன்னாள்  பிரதமர்களுக்கு பாதுகாப்பளிக்கும் என கடந்த 1988ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே, கடந்த 1991ல் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு  பிரதமர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பொறுப்பு எஸ்பிஜி.க்கு வழங்கப்பட்டது.அதன்படி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் குடும்பத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோருக்கு  கடந்த 28 ஆண்டுகளாக எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒருமுறை எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படுவோருக்கு  உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மத்திய உள்துறை அமைச்சகம் மறுஆய்வு செய்து, பாதுகாப்பு தொடர்வது குறித்து முடிவெடுத்து வருகிறது.  சமீபத்தில் நடந்த கூட்டத்தில், உளவுத்துறை, உள்துறை அமைச்சக செயலர், அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில், முன்னாள் பிரதமர்  மன்மோகன் சிங்குக்கு எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லாததால், அவருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து  செய்யப்பட்டது. எஸ்பிஜிக்கு பதிலாக அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, அவரது  மகன் ராகுல், மகள் பிரியங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அதிரடியாக ரத்து செய்துள்ளது.  மன்மோகன் சிங் போலவே, சோனியா குடும்பத்தினருக்கும் நேரடியாக எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு  உள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர். இனி இவர்கள் 3 பேருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன் குடும்பத்திற்கு இதுவரை பாதுகாப்பு அளித்த சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர்  சோனியா காந்தி, எஸ்.பி.ஜி தலைவர் அருண் சின்ஹாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், முழு குடும்பத்தின் சார்பாக, எங்களது பாதுகாப்பைக்  கவனித்து, அத்தகைய அர்ப்பணிப்பு, விவேகம் மற்றும் தனிப்பட்ட கவனிப்புடன் நல்வாழ்வைக் கவனித்ததற்காக எஸ்பிஜிக்கு எங்கள் ஆழ்ந்த  பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை