துவக்கம்! 'நீரும் ஊரும்' திட்டத்தின் கீழ் ... குளம் தூர் வாரும் பணி

தினமலர்  தினமலர்
துவக்கம்! நீரும் ஊரும் திட்டத்தின் கீழ் ... குளம் தூர் வாரும் பணி

திருக்கனுார் : புதுச்சேரியில், 120வது குளத்தை துார் வாரும் பணியை, கலெக்டர் அருண் துவக்கி வைத்தார்.

புதுச்சேரியில் அமைந்துள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை துார்வாரும் பணி 'நீரும் ஊரும்' திட்டத்தின் கீழ், அரசு சார்பிலும், தனியார் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நெட்டப்பாக்கம் செம்படப்பேட்டை கிராமத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 6970 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள கன்னிமார் குளம், பெர்ஜர் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் துார்வாரப்பட உள்ளது.இதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. குளம் துார்வாரும் பணியினை, கலெக்டர் அருண் பூமி பூஜை செய்து வைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர், உதவிப்பொறியாளர் கருத்தையன், மேலாளர் குப்பன், இளநிலைப் பொறியாளர் அகிலன், வருவாய் ஆய்வாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இது, புதுச்சேரியில் துார் வாரப்படும் 119வது குளமாகும்.கூனிச்சம்பட்டுமண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட கூனிச்சம்பட்டு கிராமத்தில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள 4900 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட, இடி விழுந்த குளம் (காட்டான் குளம்) கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் நிதியுதவியில், 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் துார்வார முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, இடி விழுந்த குளத்தை துார்வாரும் பணியை, கலெக்டர் அருண் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் செல்வம் எம்.எல்.ஏ., கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், உதவிப் பொறியாளர் நாகராஜன், இளநிலைப் பொறியாளர் சாந்தன், மேலாளர் வீரம்மாள், அலுவலக உதவியாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூனிச்சம்பட்டில் துார் வாரப்படுவது 120வது குளமாகும்.தொடர்ந்து, கூனிச்சம்பட்டு கைக்கிலக் குட்டையை பார்வையிட்ட கலெக்டர் அருண், குட்டையின் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, மரக்கன்றுகள் நட கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பெருமாள் கோவில் அருகே கழிவுநீர் தேங்கியுள்ள குளத்தை பார்வையிட்டு, பொதுப்பணித் துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, குளத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை விரைவில் வெளியேற்றி, குளத்தை துார்வார நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.கலெக்டர் அருணிடம், திருக்கனுார் பஜார் வீதியில் பொதுக் கழிப்பிடம் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு வணிக வளாகம் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என செல்வம் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார்.

மூலக்கதை