அயோத்தியில் ராமர் கோவில் பணிகள் தயார்

தினமலர்  தினமலர்
அயோத்தியில் ராமர் கோவில் பணிகள் தயார்

அயோத்தி: அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என உரிமை கோரப்படும் பகுதியில், நுழைவாயில் துாண்கள் மட்டுமே உள்ளன. ஏற்கனவே, 'விஸ்வ ஹிந்து பரிஷத்' அமைப்பின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட, 'ராம் ஜென்மபூமி நியாஸ்' என்ற அறக்கட்டளை சார்பில், ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அயோத்தியில் உள்ள கர்சேவகபுரம் என்ற இடத்தில், பணிமனை அமைத்துள்ளனர். இங்கு மரத்தாலான மாதிரி ராமர் கோவில் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன்படி, தரைமட்டத்தில் இருந்து, 128 அடி உயரம் கொண்ட இக்கோவில், 268 அடி நீளமும், 140 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். இக்கோவிலில் மொத்தம், 212 துாண்கள் இருக்கும். இரண்டு தளம் கொண்டுள்ள இக்கோவிலில், ஒவ்வொரு தளத்திலும், தலா, 106 துாண்கள் இருக்கும். ஒவ்வொரு துாணிலும் தலா, 16 சிலைகள் இடம் பெற்றிருக்கும்.


இப்பணிமனையில், ராமர் கோவில் கட்டுவதற்காக துாண்கள் செதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தவிர, 'ஸ்ரீ ராம்' மந்திரங்கள் இடம் பெற்றுள்ள சுவர் உருவாக்கப்பட்டுள்ளது. இதை காண தினமும், காலை 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை பக்தர்கள் வருகின்றனர்.

இதுகுறித்து பணிமனையின் பொறுப்பாளர், அன்னு பாய் சோம்புரா கூறுகையில், ''ராமர் கோவிலுக்கான துாண்கள் செதுக்கும் பணி, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கினால், கோவில் அடித்தளம் அமைப்பதற்கான பணியை துவக்க தயாராக உள்ளோம்,'' என்றார்.

மூலக்கதை