அயோத்தி தீர்ப்பால் தமிழகத்தில் அமைதி

தினமலர்  தினமலர்
அயோத்தி தீர்ப்பால் தமிழகத்தில் அமைதி

அயோத்தி தீர்ப்பு நேற்று (நவ.,9) வெளியான நிலையில், தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதி நிலவியதால், போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும், நிம்மதி அடைந்தனர்.

எந்த நேரமும், அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகலாம் என்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அக்டோபர் இறுதியிலிருந்தே, போலீஸ் உயரதிகாரிகள் துவக்கினர். தமிழகத்தின், நான்கு மண்டல ஐ.ஜி.,க்கள், 12 டி.ஐ.ஜி.,க்கள், 32 மாவட்ட எஸ்.பி.,க்கள், எட்டு மாநகர போலீஸ் கமிஷனர்கள், உளவுத்துறை, மதம் சார்ந்த குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டனர்.

அறிவுரை:


தமிழகத்தில், 1,400க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, மத நிர்வாகிகளை அழைத்து பேச்சு நடத்தியதோடு, நீதிமன்ற உத்தரவு எதுவாக இருந்தாலும், அதை சட்டப்படி சந்திக்க, அறிவுரை வழங்கினர். அது மட்டுமின்றி, பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என, கருதப்பட்ட மாவோயிஸ்ட், நக்சலைட்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். மேலும், ரவுடிகள், மதம் சார்ந்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.


தீர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடம், சிறப்பு பிரிவுகளில் பணியாற்றுவோர், உடனடியாக அந்தந்த மாநகர, மாவட்ட போலீசில் இணைந்து பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அதன்படி, நேற்று காலை, தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், மாநகர பகுதியில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் ஒரு தாசில்தார், அதேபோல, மாவட்டங்களில், தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், போலீசாரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பணியில் தொடர்ந்தனர்.

தமிழகம் முழுவதும், 1.02 லட்சம் போலீசார் கண்காணிப்பு, ரோந்து பணிகளில் தீவிரம் காட்டியதால், நேற்று மாலை வரை, தமிழகத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லை. இதனால், போலீஸ் உயரதிகாரிகள், வருவாய் துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

நடவடிக்கை:


இதுகுறித்து, ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த அடுத்த நிமிடமே, போலீசின் அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைந்து செயல்பட துவங்கின. அது மட்டுமின்றி, மத்திய - மாநில அரசுகளின் உளவு அமைப்புகள் என்றில்லாமல், அவர்கள் அளிக்கும் மற்றும் அளித்த அனைத்து தகவல்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதே, முழு அமைதி நிலவ காரணம். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

மூலக்கதை