பட்னவிஸ் ஆட்சியமைக்க மஹா., கவர்னர் அழைப்பு

தினமலர்  தினமலர்
பட்னவிஸ் ஆட்சியமைக்க மஹா., கவர்னர் அழைப்பு

மும்பை: மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க, பா.ஜ.,வுக்கு, கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில், அதிக தொகுதிகளில் வென்ற கட்சி என்ற வகையில், முதல்வர் பட்னவிஸ் ஆட்சியமைக்க, அழைப்பு விடப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ., 105 தொகுதிகளிலும், சிவசேனா, 56 இடங்களிலும் வென்றன. பெரும்பான்மைக்கு, 145 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்தக் கூட்டணிக்கு, 161 இடங்கள் கிடைத்தன. அதனால், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு மீண்டும் அமையும் என, எதிர்பார்க்கப்பட்டது.

கோரிக்கை:
ஆனால், சுழற்சி முறையில் முதல்வர் பதவி, 50 : 50 விகிதாசாரத்தில் அமைச்சரவையில் இடம் ஆகிய கோரிக்கைகளை, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி முன் வைத்தது. இதனால், கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக, தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. பா.ஜ., கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறும் நிலை உருவானது. ஆட்சியமைக்க, சிவசேனா ஆதரவு தெரிவிக்காத நிலையில், நேற்று முன்தினம், பட்னவிஸ், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ., ஆட்சியமைக்க முன்வராவிட்டால் மட்டுமே, அதற்கு அடுத்த இடத்தில் உள்ள சிவசேனாவுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைக்கும். எனவே, இதற்கான வாய்ப்பை மறுக்கக்கூடாது என, சிவசேனாவிடம் கூறப்பட்டிருந்தது.

சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான, 'சாம்னா' வில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: கோவா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில், தனிப்பெரும்பான்மை பெறாத நிலையிலும், மற்ற கட்சிகளை வளைத்து, பா.ஜ., ஆட்சி அமைத்தது. அந்த மாநில கவர்னர்களாக இருந்தவர்கள், பா.ஜ.,வுக்கு உதவினர். மஹாராஷ்டிராவில், பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும், ஆட்சி அமைக்க, அக்கட்சி ஏன் உரிமை கோரவில்லை? தனிப்பெரும் கட்சி என்ற நிலையில், பா.ஜ.,வை ஆட்சி அமைக்க, கவர்னர் அழைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

ஆலோசனை:
இந்நிலையில், பா.ஜ., கூட்டணியிலிருந்து, சிவசேனா வெளியேறும் பட்சத்தில், புதிய அரசு அமைப்பது தொடர்பாக, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகளும் ஆலோசித்து வருகின்றன. காங்., 44 இடங்களிலும், தேசியவாத காங்., 54 இடங்களிலும் வென்றுள்ளன. நேற்று முன்தினம், சரத் பவாரை, அவருடைய இல்லத்தில், காங்., மூத்த தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். நேற்றும் இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர். சிவசேனா மற்றும் பா.ஜ., இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கூட்டணி அரசை அமைக்க, தேசியவாத காங்., தீவிரமாக உள்ளது. இந்நிலையில், திடீர் திருப்பமாக, மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க, பா.ஜ.,வுக்கு, மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, நேற்று அழைப்பு விடுத்தார்.

பட்னவிசுக்கு, அவர் அனுப்பிய கடிதத்தில், ஆட்சி அமைப்பது குறித்து விபரத்தை தெரிவிக்கும்படி, அவர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.,வுக்கு முதல் வாய்ப்பு அளிக்கும் வகையில், கவர்னர் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மஹாராஷ்டிராவின் சட்டசபை பதவிக்காலம், நேற்று நள்ளிரவுடன் முடிந்தது. அதற்கு முன்னதாக, பா.ஜ., சட்டசபை தலைவராக உள்ள தேவேந்திர பட்னவிஸ் ஆட்சியமைக்கும் படி, கவர்னர் அழைப்பு விடுத்துள்ளது, புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை