வெற்றிக்கு வியூகம் வகுக்கும் அ.தி.மு.க.,; நலத்திட்ட உதவிகளை வாரி வழங்க முடிவு

தினமலர்  தினமலர்
வெற்றிக்கு வியூகம் வகுக்கும் அ.தி.மு.க.,; நலத்திட்ட உதவிகளை வாரி வழங்க முடிவு

உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக வியூகம் வகுக்கும் அ.தி.மு.க.,; நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கவும் முடிவு

இடைத்தேர்தல் வெற்றியால், உற்சாகத்தில் உள்ள, அ.தி.மு.க., தலைமை, உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுக்க துவங்கி உள்ளது. நேரடி தேர்தலை தவிர்த்து, மறைமுக தேர்தலை நடத்தவும், தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக, மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வாரி வழங்கவும், இ.பி.எஸ்., அரசு முடிவு செய்துள்ளது.

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதன்பின் நடந்த, வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்ற போதிலும், அ.தி.மு.க., கடும் போட்டியை தந்தது. அந்த தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளில், மூன்றில், அ.தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற்றது. அடுத்து நடந்த, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றியை பெற்றது. இரு தொகுதிகளையும், தி.மு.க., கூட்டணியிடம் இருந்து, அ.தி.மு.க., கைப்பற்றியது.

தேர்தல் அறிவிப்பு:

இந்த வெற்றி, அ.தி.மு.க., கூட்டணிக்கு, குறிப்பாக, அ.தி.மு.க.,விற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் கிடைத்த, மிகப்பெரிய வெற்றி என்பதால், தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இதே வேகத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்த, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. இந்த மாதத்திற்குள், தேர்தல் அறிவிப்பு வர உள்ளது. உள்ளாட்சி தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அப்போது தான், 2021 சட்டசபை தேர்தலில், எளிதாக வெல்ல முடியும் எனக்கருதி, வெற்றிக்கான வியூகங்களை, அ.தி.மு.க., வகுக்க துவங்கி உள்ளது.

தற்போது, மாநகராட்சி மேயர், நகராட்சி கமிஷனர், பேரூராட்சி தலைவர்களை, நேரடி தேர்தல் வாயிலாக, தேர்வு செய்யும் முறை உள்ளது. அதாவது, மக்கள் ஓட்டளித்து, வெற்றி பெறும் நிலை உள்ளது. இதை மாற்றி, மறைமுக தேர்தல் வழியே, கவுன்சிலர்கள் ஓட்டளித்து, அவர்களை தேர்வு செய்ய, அ.தி.மு.க., ஆலோசித்து வருகிறது. நேரடி போட்டி என்றால், கூட்டணி கட்சியினர், தங்களுக்கு மாநகராட்சி மேயர், நகராட்சி கமிஷனர் பதவிகளை அதிகம் கேட்பர். மறைமுக தேர்தல் என்றால், சதவீத அடிப்படையில், கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கும் போது, அ.தி.மு.க., அதிக இடங்களை பெற வாய்ப்புள்ளது.

மேலும், நேரடி தேர்தல் என்றால், வெற்றிக்கு பெரும் தொகையை செலவிட வேண்டிய நிலை ஏற்படும். மறைமுக தேர்தல் என்றால், அந்த தேவை இருக்காது. வேட்பாளர்களே பெரும்பாலும் செலவுகளை பார்த்துக் கொள்வர். தேர்தலுக்கு பின், மாற்று கட்சியினரை இழுப்பதும் எளிதாக இருக்கும். எனவே, மறைமுக தேர்தல் நடத்த, அவசர சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

உதவித்தொகை:

அடுத்து தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, அனைத்து மாவட்டங்களிலும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட உள்ளது. இதற்காகவே, முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம், ஆகஸ்ட், 19ல் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட கலெக்டர்கள், பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். மாநிலம் முழுவதும், 9.72 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், 5.11 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன. பல்வேறு காரணங்களால், 4.37 லட்சம் மனுக்கள் ஏற்கப்படவில்லை. மீதமுள்ள, 23 ஆயிரத்து, 538 மனுக்கள் மீது, இந்த வார இறுதிக்குள் முடிவு எடுக்கும்படி, முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், ஏற்கப்படாத மனுக்களையும், மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கப்பட்ட மனுக்களில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாதாந்திர உதவித் தொகை கோரி, 1.44 லட்சம் பேர் மனு தந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும், உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களில் உதவித்தொகை கோரி வரப்பெற்று, நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும், நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவு:

மாவட்டந்தோறும் அமைச்சர்கள் தலைமையில், 20ம் தேதிக்குள், வட்டார அளவில் கூட்டம் நடத்தி, நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும், நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கவும், மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றவும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி அதிவேகமாக, தேர்தலுக்கு ஆயத்தமாகி வருவது, எதிரணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -

மூலக்கதை